“தவெக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக் தான் பேசுகிறார்” – வைகோ கருத்து
தவெக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக்கே பேசுகிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கலிங்கப்பட்டி போவதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் நேற்று மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“தமிழகத்தில் போதைப்பொருட்களை ஒழிக்க வலியுறுத்தி ஜன.2-ம் தேதி திருச்சி – மதுரை சமத்துவ நடைபயணம் தொடங்குகிறேன். முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணத்தை தொடங்கி வைக்கிறார். காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை, விசிக தலைவர் தொல்.திருமாளவன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்துகின்றனர்.
தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்தும் திராவிட மாடல் நல்லாட்சியை 2026-ல் மீண்டும் அமையவேண்டும் என்ற அரசியல் கருத்தை வலியுறுத்துவேன். திமுக கூட்டணி உறுதியாக தனிப் பெருபான்மை பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பது எனது கணிப்பு.
திருப்பரங்குன்றம் விவகாரம் இந்துத்துவவாதிகளால் திட்டமிட்டு ஏற்படுத்தப்படுகிறது. மலையிலுள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் வழக்கமில்லை. இம்முறை திட்டமிட்டு தீபத்தூணில் தீபம் ஏற்றும் முயற்சிக்கு நீதிபதியே அச்சுறுத்தும் பாணியில் தீர்ப்பு கொடுத்துள்ளது ஜனநாயகத்துக்கு விரோதமானது. சமீப காலத்தில் நீதித்துறை தனிப்பட்ட சொந்த கருத்துகளை திணிக்கும் முயற்சியால் அபாயம் சூழந்துள்ளது. இதற்கு மக்கள் இடம் கொடுக்கவில்லை.
இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒற்றுமையாக இருக்கின்றனர். திருப்பரங்குன்றம் பிரச்சினையில் எவ்வித கலவர உணர்ச்சிக்கும் இடம் கொடுக்காதது மதுரைக்கு பெருமை. இந்த நிலை நீடிக்கவேண்டும்.
மத்தியில் திடீரென வந்தே மாதரம் கொடியை தூக்கி பிடித்து ஆதரவு திரட்டுகின்றனர். இதன் மூலம் இந்துத்துவத்தை திணிக்க முயல்கின்றனர். தமிழகத்தில் வேறுபாடு, மோதலை ஏற்படுத்த முடியாது. திராவிடத்தில் ஊறி திளைத்த தமிழகம் பக்குவப்பட்ட மாநிலம்.
தவெக தலைவர் விஜய் இன்னும் சினிமா டயலாக் தான் பேசுகிறார். 41 உயிர்கள் பலியானபோனது அவர் பதறவில்லை. அனுதாபமும், இரங்கலும் தெரிவிக்காமல் பொறுப்புணர்ச்சி இன்றி இரவோடு, இரவாக சென்னைக்கு சென்றார். 40 நாட்கள் பிறகு தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து துக்கம் கேட்டுள்ளார். இதன் மூலம் அவர் விசித்திரமான முறையை பின்பற்றி இருக்கிறார். அவர் எடுத்து வைக்கும் முதல் அடியே பிழை. அவர் எங்கு வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம். அதில் என்ன கருத்துகள் சொல்கிறார் என கவனித்து பார்ப்போம்” என்று அவர் கூறினார்.
