அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது – ஜனாதிபதி அறிவிப்பு
எதிர்காலத்தில் அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு இடமளிக்கப்படாது எனவும், அதற்கான சட்டங்கள் வலுப்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை செய்யத் தவறினால் நாடு மிகப்பெரிய பேரழிவை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குருநாகல் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற விசேட மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குருநாகல் மாவட்டத்தில் சேதமடைந்த அனைத்து மாகாண வீதிகள் மற்றும் பிரதேச சபை வீதிகளையும் அடுத்த இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைத்து பொதுமக்களின் போக்குவரத்துக்கு திறக்குமாறும் ஜனாதிபதி சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு அறிவுறுத்தினார்.
தற்போது ஒதுக்கப்பட்டுள்ள நிதியை இதற்காகப் பயன்படுத்துமாறும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் நிறைவு செய்யக் கூடிய பாதைகள் குறித்த தகவல்களையும் தேவையான நிதியையும் அறிவிக்குமாறும், 2026 ஆம் ஆண்டுக்கு அந்த நிதியை ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
அனர்த்தம் காரணமாக, மாவட்டத்தில் ஏ மற்றும் பி தர 1,181 மாகாண வீதிகள் சேதமடைந்துள்ளன.
அதே சமயம் 35 பாலங்கள், 162 மதகுகள் என்பன சேதமடைந்துள்ளன. அவற்றின் விரைவான மறுசீரமைப்பு குறித்து இதன் போது முக்கியமாக ஆராயப்பட்டது,
அனர்த்தம் காரணமாக மாவட்டத்தில் வீழ்ச்சியடைந்த மின்சாரம், நீர் வழங்கல் மற்றும் தகவல் தொடர்பு வசதிகள் உள்ளிட்ட அத்தியாவசிய உள்கட்டமைப்பு வசதிகளை நிறுவுவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதி விளக்கம் கேட்டிருந்தார்.
அந்த சேவைகளை வழங்குவது சேவை வழங்குநர்களின் பொறுப்பு என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் சிறந்த ஒருங்கிணைப்புடன் செயல்படுவதன் மூலம் தற்போதுள்ள தடைகளை நீக்க வேண்டிய அவசியம் உள்ளது எனவும் சுட்டிக்காட்டினார்.
இதனிடையே, நாடு முழுவதும் உள்ள கால்நடை பண்ணைகள் குறித்த தரவுகளை மீளாய்வு செய்து, இழப்பீட்டுத் தொகைகள் குறித்து விரைவில் கொள்கை ரீதியான முடிவெடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தியிருந்தார்.
மேலும், மக்களை மீள்குடியேற்றுவதற்கான காணிகளை அடையாளம் காண்பது மற்றும் சேதமடைந்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்தும் இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இந்நிலையில், இழப்பீடு வழங்குவதிலும் மக்களை மீள்குடியேற்றுவதிலும் பிரதேச செயலாளர்கள் முழுமையாக தலையிட வேண்டும் என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.
பகிரவும்...