பாகிஸ்தானின் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீர் நியமனம்
பாகிஸ்தானில் இதுவரை இல்லாத புதிய உயர்பதவியாக “ முப்படைகளின் பிரதானி” (Chief of Defence Forces – CDF) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் பதவியை உருவாக்க, பாகிஸ்தான் அரசியலமைப்பின் 243 ஆவது பிரிவில் 27வது திருத்தச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்தியாவின் “ஆபரேசன் சிந்தூர்” நடவடிக்கையில் பாகிஸ்தான் எதிர்கொண்ட கடும் பின்னடைவை அடுத்து, பாதுகாப்பு அமைப்பை மறுசீரமைக்கும் நோக்கில் பாகிஸ்தான் அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், தற்போதைய இராணுவத் தளபதியான பீல்ட் மார்ஷல் அசிம் முனீருக்கு பதவி நீட்டிப்பு வழங்கும் வகையிலும் இந்த புதிய பதவி உருவாக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் முதல் முப்படைகளின் பிரதானியாக அசிம் முனீரை நியமிக்கும் பிரதமரின் பரிந்துரையை அந்நாட்டு ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி அங்கீகரித்து உள்ளார். இந்த நியமனம் 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் என்று ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிய பதவியை ஏற்றுக்கொள்ளும் அசிம் முனீர், இதுவரை வகித்து வந்த இராணுவத் தளபதி (Army Chief) பொறுப்பையும் தொடர்வார்.
முப்படைகளின் பிரதானி பதவிக்கு உட்பட்ட அதிகாரம், இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை என மூன்று முப்படைகளையும் ஒரே கட்டமைப்பின் கீழ் ஒருங்கிணைக்க வழிவகுக்கும். இதுவரை முப்படைகளின் அதிகாரமும் கட்டுப்பாடும் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவையின் கீழ் இருந்தது. இனி அந்த அதிகாரம் ஒரே உயரதிகாரியிடம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
நாட்டின் பாதுகாப்பு அமைப்பில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் இந்த புதிய பதவி, பாகிஸ்தானின் பாதுகாப்பு கொள்கையில் முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.
பகிரவும்...