Main Menu

மழை குறைந்தாலும் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்படக் கூடும் – வளிமண்டலவியல் திணைக்கள பணிப்பாளர்

கடுமையான மழை வீழ்ச்சி தணிந்திருந்தாலும், மத்திய மலைநாட்டின் மின் உற்பத்தி நிலையங்களை அண்டிய பகுதிகளில் பெய்த மழைநீர் படிப்படியாகக் கீழ் நோக்கி வருவதால், வெள்ள அபாயம் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் விடுக்கும் அறிவிப்புகள் தொடர்பில் தொடர்ந்து அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தற்போது நாடு முழுவதும் மண் அதிக ஈரப்பதத்துடன் காணப்படுவதால், மண்சரிவு ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே, மக்கள் தமது வீடுகளுக்குத் திரும்பும் போது சுற்றுப்புறச் சூழல் குறித்து அவதானமாக இருக்க வேண்டும்.

திருகோணமலையிலிருந்து காங்கேசன்துறை ஊடாக புத்தளம் வரையான கடற்பரப்புகளில் எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிப்பதால், இன்றும் (30) அந்தப் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புயலின் நேரடித் தாக்கம் நீங்கியிருந்தாலும், மறைமுகத் தாக்கம் காரணமாகக் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதோடு, கடல் அலைகள் 2 – 3 மீற்றர் வரை உயரக்கூடும்.

ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகம் குறைவடைந்துள்ளதால், மீன்பிடித் திணைக்களத்துடன் கலந்தாலோசித்து, மீன்பிடி நடவடிக்கைகளை ஆரம்பிப்பது தொடர்பில் தகுந்த முடிவுகளை எடுக்க முடியும் எனப் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

பகிரவும்...