இம்ரான் கான் கொல்லப் பட்டாரா? – அடியாலா சிறை நிர்வாகம் விளக்கம்
கடந்த 2 ஆண்டுகளாக பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அந்நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், சிறையில் பாகிஸ்தான் இராணுவத்தால் சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக நேற்று (26) சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் எந்த உண்மையும் இல்லை என்றும் அவை ஆதாரமற்ற வதந்திகள் என்றும் அடியாலா சிறைச்சாலை அறிக்கை வெளியிட்டது.
இம்ரான் கான் கொல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய வதந்திகளை நிராகரித்து, நேற்றை தினம் சிறைச்சாலை வெளியிட்ட அறிக்கையின் ஊடாக, இம்ரான் கான் சிறைக்குள்தான் இருக்கிறார், அவர் வேறு எங்கும் மாற்றப்படவில்லை, அவர் தொடர்ந்து முழுமையான மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார் என்று சிறை நிர்வாகம் அறிவித்துள்ளதாக ஜியோ நியூஸ், பாகிஸ்தான் டுடே முதலிய செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட இம்ரான் கான் கடந்த 2023ஆம் ஆண்டு முதல் அந்நாட்டின் ராவல்பிண்டி அடியாலா சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில், சில நாட்களாக இம்ரான் கானை சந்திக்கச் சென்ற அவரது மூன்று சகோதரிகள் மற்றும் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக் இ இன்சாப் (PTI) கட்சித் தொண்டர்களை சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை.
இம்ரான் கானை சந்திக்க சிறைக்குள் அனுமதி மறுக்கப்பட்டு வந்த காரணத்தினால் அவர் சிறைக்குள் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அந்நாட்டில் பரவத் தொடங்கியது.
இம்ரான் கானை சந்திக்க விடாமல் சிறை நிர்வாகம் தடுப்பதில் சந்தேகம் கொண்டு சகோதரிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் சிறைச்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இம்ரான் கானின் உயிருக்கு ஏதும் ஆபத்து நேர்ந்திருக்கலாம் என்று சகோதரிகள் கூறத் தொடங்கினர்.
அதன் தொடர்ச்சியாக, இம்ரான் கான் சிறைச்சாலையில் வைத்து பாகிஸ்தான் இராணுவத்தால் கொலை செய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் பொலிஸாரால் கடுமையாக தாக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் நேற்று சமூக ஊடகங்களில் பல்வேறு பதிவுகள் பரவத் தொடங்கின.
இந்த சமூக ஊடகப் பதிவுகள் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து வெளிவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, சிறைச்சாலை வளாகத்தில் இம்ரான் கான் ஆதரவாளர்கள் பெருமளவினர் திரண்டு கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக சிறைச்சாலைக்கு வெளியே அதிக எண்ணிக்கையிலான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இம்ரான் கானின் நிலை குறித்து அரசாங்கம் விசாரணை நடத்தவேண்டும் என கட்சித் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர்.
கடந்த ஒரு மாத காலமாக இம்ரான் கானை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டு வருவதால் பல்வேறு சந்தேகங்கள் கிளம்பியுள்ள இதேவேளை, இம்ரான் கான் ஸ்ட்ரெச்சரில் படுத்திருப்பது போன்ற ஒரு புகைப்படமும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. மேலும் அவர் கொல்லப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்து, பல வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. எனினும், பாகிஸ்தான் அரசும் சிறை நிர்வாகமும், தற்போது பரவும் செய்திகளை மறுத்து வருகின்றன.
இச்சூழ்நிலையில் இம்ரான் கானின் தங்கை நோரின் நிாயஸி கூறுகையில், “அண்ணன் இம்ரான் கானை பார்க்கவேண்டும் என்றுதான் சிறைக்கு சென்றோம். நாங்கள் அமைதியான முறையில்தான் சிறைக்கு வெளியில் போராடினோம். எங்கள் அண்ணன் உடல்நிலை பற்றி கவலையாக உள்ளது. திடீரென அங்கு மின்விளக்குகள் அணைக்கப்பட்டு பஞ்சாப் மாகாண பொலிஸார் எங்கள் மீது தாக்குதல் நடத்தினர். எனக்கு 71 வயதாகிறது. எனது தலைமுடியை பிடித்து இழுத்துச் சென்று என்னை வீதியில் தள்ளிவிட்டனர். இதனால் எனது உடல் முழுவதும் காயங்கள் ஏற்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இம்ரான் கானை யாரும் சந்திக்காதவாறு அதிகாரபூர்வமற்ற தடையை பாகிஸ்தான் அரசு விதித்திருக்கக்கூடும் என்றும் அதனால்தான் கடந்த சில வாரங்களாக இம்ரான் கானை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...