யுத்தப் பகுதிகளின் காணி பிரச்சினைகள் தீர்க்க அரசு நடவடிக்கை – அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி
யுத்தம் இடம்பெற்ற பகுதிகளில் காணி பிரச்சினைகள் உள்ளன. அது இன்னும் தீர்க்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் குறித்த பிரதேசங்களில் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன தமது பிரதேச எல்லைகளை அடையாளமிடும் போது அந்த பகுதிகளுக்கு சென்று அதனை செய்ய முடியாமையினால் ஜீ.எஸ்பி மூலமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது சில குறைபாடுகள் காணப்பட்டிருக்கலாம். இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. இதற்கான தீர்வுகளை வழங்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளோம் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்தார்.
வெருகல் பிரதேசத்தில் பெருமளவான காணிகளை வனவிலங்கு துறை உரிமை கோருவது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். குகதாசனால் பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை (24) முன்வைக்கப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் பதிலளித்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
குகதாசன் எம்.பி முன்வைத்துள்ள விடயம் தொடர்பில் சில தெளிவுப்படுத்த வேண்டியுள்ளது. சரணாலய வலயம் எனும் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தில் காணிகள் மட்டுமன்றி அதனுள் தனியார் காணிகள், அரச பல்வேறு திணைக்களங்களுக்கு சொந்தமான காணிகள், பல்வேறு வகையில் காணி உரிமைகள் உள்ள காணிகள் இருக்கலாம். இதனை முகாமைத்துவம் செய்யும் பொறுப்பு வனவிலங்கு ஜீவராசிகள் திணைக்களத்திற்கே உரியது.
இதனால் அங்கு அபிவிருத்திகளை செய்யும் போது அந்த திணைக்களத்தின் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.
இந்நிலையில் வெருகல் பிரதேச செயலக பகுதியில் சேருவல அல்லே சரணாலய பகுதியில் அவ்வாறே முன்னெடுக்கப்படும். அந்த பகுதி சாரணாலய பகுதியாக 1970 ஆம் ஆண்டிலேயே அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குள் தனியார் இடங்கள், அரச காணிகள் உள்ளன. இங்கு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு குறிப்பிட்ட திணைக்களத்தில் அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டும்.
யுத்தம் நடந்த பகுதிகளில் காணி பிரச்சினைகள் உள்ளன. அது இன்னும் தீர்க்கப்படவில்லை. யுத்தத்தின் பின்னர் குறித்த பிரதேசங்களில் வன பாதுகாப்பு மற்றும் வன ஜீவராசிகள் திணைக்களம் என்பன தமது பிரதேச எல்லைகளை அடையாளமிடும் போது அந்த பகுதிகளுக்கு சென்று அதனை செய்ய முடியாமையினால் ஜீ.எஸ்பி மூலமே அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. இதன்போது சில குறைபாடுகள் நடந்திருக்கலாம் என்று நம்புகின்றோம்.
அங்கு ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் அறிந்து விடுவிக்கப்படக்கூடிய காணிகள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட குழுவொன்று அமைக்கப்பட்டது.
அந்தக் குழு கடந்த ஒக்டோபர் 28ஆம் திகதி கூடியது. இதில் பல்வேறு திணைக்களங்கள் உள்ளடங்குவதுடன், மாவட்ட செயலாளர்களும் உள்ளனர். இதன்போது இந்த பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடப்படுகின்றது. இதற்கான தீர்வுகளை வழங்கும் செயற்பாட்டிலேயே நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என்றார்.
பகிரவும்...