Main Menu

ஹெரோயினுடன் பிடிபட்ட அதிபரின் மனைவி, கொஸ்கொட சுஜீயின் உறவினர்

அநுராதபுரம் பகுதியில் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகர சபை உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பவர், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட அதிபரின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் கூறியுள்ளது.

கடந்த மாதம் 29ஆம் திகதி அநுராதபுரம் இப்பலொகம பகுதியில் இப்பலொகம பொலிஸாரால் ஒரு இளைஞர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டார்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த நிலையில், அவரைப் பார்க்க வந்த நண்பர் ஒருவரிடம், தனது வீட்டில் ஒரு ஹெரோயின் பொட்டலம் இருப்பதாகவும், அதை வீட்டிற்கு அருகிலுள்ள குளத்திற்கு அருகில் மறைத்து வைக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார்.

அதன்படி, அந்த நண்பர் அதனை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளார்.

இதற்கிடையில், சந்தேகநபர் தனது தந்தையிடம், அந்தப் போதைப்பொருள் தொகையை நண்பரிடமிருந்து மீண்டும் பெற்று வீட்டின் பின்னால் மறைத்து வைக்குமாறு கூறியுள்ளார்.

அந்தப் பொட்டலத்தில் 2 கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயின் இருப்பதால், நண்பர் அதைத் திருடிச் செல்ல வாய்ப்புள்ளதாகச் சந்தேகநபர் தனது தந்தையிடம் கூறியதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன்படி, சந்தேகநபரின் தந்தை, அந்த நண்பர் மூலமாகவே ஹெரோயின் தொகையை மீளப் பெற்று, கல்நேவவில் உள்ள தமது வீட்டின் பின்னால் குழி தோண்டிப் புதைத்துள்ளார்.

அநுராதபுரம் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த தகவலின் பேரில், முதலில் நண்பர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டபோது, மறைத்து வைக்கப்பட்ட போதைப்பொருள் குறித்த தகவல்கள் வெளியாகின.

அதன்படி, வீட்டின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஹெரோயின் பொட்டலம் கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 1 கிலோ 185 கிராம் 400 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் இருந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதன் பின்னர், பொலிஸார் சந்தேகநபரின் தந்தையைக் கைது செய்து விசாரித்தபோது, அவர் அப்பகுதியிலுள்ள அரச பாடசாலை ஒன்றின் அதிபர் என்பது தெரியவந்தது.

மேலும், அவரது மனைவி பேலியகொடை நகர சபையின் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் திஸ்னா நிரஞ்சலா என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து, குறித்த நகர சபை உறுப்பினரின் பேலியகொடையிலுள்ள வீட்டை பொலிஸார் நேற்று மாலை சோதனையிட்டபோதிலும், சந்தேகத்திற்கிடமான எதுவும் மீட்கப்படவில்லை.

அத்துடன், குறித்த நகர சபை உறுப்பினர், பாரிய போதைப்பொருள் கடத்தல்காரரும் குற்றவாளியுமான கொஸ்கொட சுஜீயின் உறவினர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட அதிபரும் மற்றைய சந்தேகநபரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

அவர்களின் சொத்துக்கள் தொடர்பாகவும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பிரிவு மேற்கொண்டு வருகிறது.

பகிரவும்...
0Shares