பிரிட்டன் இளவரசர் அன்றூவின் பட்டங்களை பறிக்க மன்னர் சார்லஸ் உத்தரவு
பிரிட்டன் மன்னர் சார்லஸின் இளைய சகோதரரான இளவரசர் அன்றூ பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் சிக்கியதைத் தொடர்ந்து, அன்றூவின் அரச பட்டங்கள், அரச பரம்பரைக்குரிய கௌரவங்களை பறித்து, அவரை வின்ட்சர் இல்லத்தை விட்டு வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ் அதிகாரபூர்வமாக ஆரம்பித்திருப்பதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அன்றூவினால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும், அண்மையில் உயிர்மாய்த்துக்கொண்ட அமெரிக்கப் பெண்ணான வர்ஜீனியா கியூப்ரேயின் குடும்பத்தினர், மன்னரின் நடவடிக்கை தொடர்பில் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்ட அறிவிப்பினை வரவேற்பதாக பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.
அன்றூவுக்கு எதிரான இந்த அறிவிப்பை செய்திகளின் ஊடாக அறிந்த வர்ஜீனியாவின் குடும்பத்தினர், இது வரலாற்றில் முன்னெப்போதும் கிடைக்காத வெற்றி” என்கின்றனர்.
“ஒரு சாதாரண குடும்பத்தைச் சேரந்த சாதாரண பெண் இளவரசரை வீழ்த்தியுள்ளார்” என்று பெருமையோடும் கண்ணீரோடும் வர்ஜீனியாவின் சகோதரர் ஸ்கை ரொபர்ட்ஸ் பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“நான் மன்னரை பாராட்டுகிறேன். அவர் ஒரு சிறந்த உலகத் தலைவராக, அற்புதமான ஒரு வேலையைச் செய்வதன் மூலம் ஒரு முன்னுதாரண மனிதராகத் திகழ்கிறார்.
எனினும், மன்னர் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதாது. இதில் இன்னும் முன்னேற்றமான விடயங்கள் இடம்பெறவேண்டும். விசாரணைகள் தொடரப்படவேண்டும். அன்றூ இன்னும் ஒரு சுதந்திரமான மனிதராக நடமாடிக்கொண்டிருக்கிறார். அவர் சிறையில் இருக்கவேண்டும்” என ரொபர்ட்ஸ் வேதனையோடு தெரிவிக்கிறார்.
வர்ஜீனியா அமெரிக்க பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் மற்றும் பிரிட்டன் இளவரசர் அன்றூ மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியதைத் தொடர்ந்து, அவர் கடந்த ஏப்ரல் மாதம் உயிர்மாய்த்துக்கொண்ட செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அதனையடுத்து, தன் மீதான குற்றச்சாட்டுக்களால் பிரிட்டன் அரச குடும்பத்தினர், தமது பணிகளை மேற்கொள்வதில் இடையூறுகளை சந்தித்து வருவதை சுட்டிக்காட்டி, தான் அரச பட்டங்களையும் கௌரவங்களையும் துறப்பதாகவும் பொது வாழ்க்கையில் தான் விலகிக்கொள்வதாகவும் அண்மையில் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அன்றூவின் பட்டங்கள் மற்றும் அரச கௌரவங்களை பறிக்கும் நடவடிக்கைகளை மன்னர் சார்லஸ் ஆரம்பித்திருக்கிறார்.
இது தொடர்பாக பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இளவரசர் அன்றூவின் ஆடை, பட்டங்கள், கௌரவங்களை திரும்ப பெறுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளது. இளவரசர் அன்றூ இப்போது ‘அன்றூ மவுண்ட்பேட்டன் வின்ட்சர்’ என்று அழைக்கப்படுவார். அவர் வின்ட்சர் இல்லத்தை விட்டு வெளியேற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் அரண்மனையிலிருந்து வெளியேறி, மாற்று தனியார் தங்குமிடத்துக்குச் செல்வார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்றூவின் பட்டங்கள், பதவிகள், அரண்மனை வாழ்க்கை பறிக்கப்பட்டபோதும் அவர் தன் மீது எந்தத் தவறும் இல்லை என்றே தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பகிரவும்...