Main Menu

இஷாரா செவ்வந்திக்கு உதவிய சட்டத்தரணிக்கும் பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்-களுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு?

“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலையுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்திக்கு துப்பாக்கியை மறைத்து வைக்க  ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி தொடர்பில் பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு பின்னர் ஒக்டோபர் 15 ஆம் திகதி நாடு கடத்தப்பட்டதையடுத்து பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவ்வாறு பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பிஸ்டல் ரக துப்பாக்கியை மறைத்து வைப்பதற்கு ‘தண்டனைச் சட்டக்கோவை’ நூலை வழங்கியதாக கூறப்படும் பெண் சட்டத்தரணி கடவத்தை பிரதேசத்தில் வைத்து ஒக்டோபர் 28 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவின் கீழ் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள பெண் சட்டத்தரணி பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்டபுடையவர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக கம்பஹா நீதிமன்றில் 5 வழக்குகள்  காணப்படுவதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த குற்றவாளிகளுக்கு எதிரான வழக்குகளுக்கு சார்பாக நீதிமன்றில் ஆஜராகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “குடு சலிந்து” என்பவர் மடகஸ்கரில் கைதுசெய்யப்பட்ட போது இந்த பெண் சட்டத்தரணி, அந்நாட்டுக்குச் சென்று குடு சலிந்துக்காக வாதிட்டுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கெஹெல்பத்தர பத்மே” என்பவருடன் வாட்ஸ்அப் ஊடாக தொடர்புகளை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த பெண் சட்டத்தரணி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த  “தருன்” என்பவர் உள்ளிட்ட பலருடன் நெருங்கிய தொடர்புகளை பேணி வந்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares