வெலிகம பிரதேச சபை தவிசாளர் கொலை தொடர்பில் இதுவரை 9 பேர் கைது
வெலிகம பிரதேச சபைத் தவிசாளர், லசந்த விக்ரமசேகரவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆறு சந்தேகநபர்களையும் 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதுடன் மேலும் இரண்டு சந்தேகநபர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மற்றும் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் உட்பட முக்கிய சந்தேகநபர்கள் உள்ளடங்களாக 9 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கொலைச் சம்பவத்திற்காக சுமார் 15 லட்சம் ரூபா ஒப்பந்தம் செய்யப்பட்டமை விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டபோது, இந்தக் கொலை ‘டுபாய் லொக்காவின்’ ஒப்பந்தத்தின் பேரில் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
சம்பவத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட 9 சந்தேக நபர்களிடம் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
மேலும் துப்பாக்கிதாரியையும், கெகிராவையில் கைது செய்யப்பட்ட மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் உட்பட 6 சந்தேக நபர்களும் மேலதிக விசாரணைக்காக பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு பொலிசாருக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியுள்ளது.
அத்துடன் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்வத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் நேற்று மாலை கொழும்பு நீதிமன்ற சட்ட வைத்திய அதிகாரியின் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்தி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர், சந்தேக நபர்களைத் தடுத்து வைத்து விசாரிக்க எதிர்பார்க்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு சந்தேகநபர்கள் இன்று(28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் மனைவிக்கு உதவிய ஒருவரும் மேலும் துப்பாக்கிச்சூடு நடத்தியவருக்கு உதவிய ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை லசந்த விக்கிரமசேகரவை சுட்டுக் கொன்ற துப்பாக்கித்தாரியை செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் உதவியுடன் அடையாளம் கணாப்பட்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த துப்பாக்கித்தாரி மஹரகம – நாவின்ன, பகுதியில் உள்ள ஒரு தொலைபேசி கடையிலிருந்து வெளியே வந்தபோது, செயற்கை நுண்ணறிவு (AI ) தொழில்நுட்பத்தின் உதவியுடன் விசாரணை பிரிவுகள் உருவாக்கிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு, ஒரு உளவுத்துறை அதிகாரியால் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...