Main Menu

லூவர் அருங்காட்சியக சம்பவம்: இலங்கையின் ‘Ceylon Sapphire’ நீலக்கற்கள் கொண்ட கிரீடமும் திருட்டு

பாரிஸில் உள்ள உலகப் புகழ்பெற்ற லூவர் அருங்காட்சியகத்திலிருந்து அண்மையில் திருடப்பட்ட பொருட்களில், பிரான்ஸை இறுதியாக ஆட்சி செய்த மேரி அமிலி ராணி மற்றும் ஹோர்டென்ஸ் ராணி அணிந்திருந்த கிரீடமும் அடங்குவதாக அருங்காட்சியக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த கிரீடத்தில், இலங்கையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட ‘சிலோன் சபையர்’ (Ceylon Sapphire) என்று அழைக்கப்படும் 24 நீலக்கற்கள் பதிக்கப்பட்டிருந்தன என்று லூவர் அருங்காட்சியகத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர். அந்தக் கிரீடத்தில் மொத்தம் 1,083 வைரக்கற்கள் இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நகைகள், இலங்கையின் மாணிக்க சுரங்கங்களுக்கும் ஐரோப்பிய அரச குடும்பங்களுக்கும் இடையே இருந்த அற்புதமான தொடர்புக்கு மேலும் ஓர் உதாரணம் ஆகும். இந்த நீலக்கற்கல் பதிக்கப்பட்டபோது இலங்கை ‘சிலோன்’ என்று அழைக்கப்பட்டது.

திருடப்பட்ட இந்த சிறிய கிரீடம், திருமணமான ராணிகள் மற்றும் இளவரசிகள் அணியும் கிரீடமாகும். அத்துடன், நீலக்கற்கள் பதிக்கப்பட்ட ஒரு அட்டிகை மற்றும் காதணி சோடி ஒன்றும் அந்த சம்பவத்தின்போது திருடப்பட்டதாகக் கூறப்படுகிறது.

பாரிஸின் வடிவமைப்புக் கலையின் (Parisian craftsmanship) அழகையும் இந்த நீலக்கற்களின் கவர்ச்சியையும் கொண்ட நகைகள், கண்காட்சியின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டது.

இதன் பெறுமதி சுமார் 10 முதல் 12 மில்லியன் யூரோக்கள் (இலங்கை நாணய மதிப்பில் ரூ. 3.5 முதல் 4.2 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

அதேநேரம், நெப்போலியன் பொனபார்ட் 1810 ஆம் ஆண்டில் பேரரசி மேரி-லூயிஸுக்குப் பரிசாக வழங்கிய மரகத அட்டிகை மற்றும் காதணிகளும் அடங்குவதாகவும் இதன் பெறுமதி சுமார் 3.7 மில்லியன் யூரோக்கள் (ரூ. 1.3 பில்லியன்) எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸிய பேரரசி யூஜீனி 1600 களில் பயன்படுத்தி வரலாற்றுச் சிறப்புமிக்க மாஸரின் வைரக்கற்கள் (Mazarin diamonds) இரண்டைக் கொண்டுள்ள புரூச் ரக நகையொன்றும் திருடப்பட்டுள்ளதுடன். இதன் மதிப்பிடப்பட்ட தொகை 5 மில்லியன் யூரோக்கள் (ரூ. 1.76 பில்லியன்) ஆகும்.

யூஜீனியின் வைர வில் வடிவ ‘புரூச்’ – 1855 உலகளாவிய கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட 4,000 வைரங்களைக் கொண்ட பட்டியொன்றின் ஒரு பகுதியாகும். இதனை லூவர் அருங்காட்சியகம் 2008 ஆண்டில் மீண்டும் பெறுவதற்காக 6.72 மில்லியன் யூரோக்களை (ரூ. 2.36 பில்லியன்) செலுத்தியிருந்தது.

அத்துடன், திருடப்பட்ட பொருட்களில் யூஜீனியின் 212 முத்துக்களையும் சுமார் 2,000 வைரங்களையும் கொண்ட, 8 மில்லியன் யூரோக்கள் (ரூ. 2.8 பில்லியன்) வரை பெறுமதியுடையது என கூறப்படும் முத்து கிரீடமும் அடங்குகிறத.

எவ்வாறாயினும், கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களில், யூஜீனியின் கிரீடமொன்று மட்டுமே கண்டுபிடிக்க முடிந்தது. இது அருங்காட்சியகத்துக்கு அருகில் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

கொள்ளையர்கள் தப்பிச் செல்லும் அவசரத்தில் அதனைக் கீழே தவறவிட்டுச் சென்றிருக்கலாம் என கருதப்படுகிறது.

1,354 வைரங்கள் மற்றும் 56 மரகத மணிகளைக் கொண்ட இந்தக் கிரீடத்தின் பெறுமதி 10 மில்லியன் யூரோக்கள் (ரூ. 3.5 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது.

பகிரவும்...
0Shares