Main Menu

புலிகள் அமைப்பு உறுப்பினரின் குடிவரவு தொடர்பில் கனடா பாதுகாப்பு அமைச்சரின் அலுவலகம் விசாரணை?

தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) அமைப்பின் உறுப்பினராகக் கருதப்படும் ஒருவரின் குடிவரவு விண்ணப்பம் குறித்து கனடாவின் பொதுப் பாதுகாப்பு அமைச்சரான கேரி ஆனந்தசங்கரியின் தொகுதி அலுவலகம், மீண்டும் மீண்டும் அரசாங்க அதிகாரிகளிடம் விசாரித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்ற ஆவணங்கள் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக கனேடிய ஊடகங்கள் கூறுகின்றன. எவ்வாறாயினும், அமைச்சரின் பேச்சாளர், தமது அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி பதவிக்கு வருவதற்கு முன்னர், அவரது தொகுதி அலுவலகம் ரஜினி இராஜமனோகரன் என்பவரின் குடிவரவு வழக்கில், 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், மூன்று முறை குடிவரவு, ஏதிலிகள் மற்றும் குடியுரிமை தொடர்பான கனேடிய IRCC) அதிகாரிகளிடம் நிலை குறித்து விசாரித்துள்ளது.
முன்னதாக, ரஜினி இராஜமனோகரன் விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு “உறுப்பினர்” என்ற அடிப்படையில் கனடாவுக்குள் நுழைய தகுதியற்றவர் என எல்லைப் பாதுகாப்பு அதிகாரிகள் குற்றம் சாட்டியிருந்தனர்.
எனினும் ரஜினி இராஜமனோகரன், தான் கட்டாயப்படுத்தப்பட்டு முகாமில் சமையல் வேலை பார்த்ததாகவும், காயமடைந்த போராளிகளுக்கு உதவிகள் செய்ததாகவும், தீவிரவாதத்துடன் தனக்கு நேரடித் தொடர்பு இல்லை என்றும் மறுப்பு தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த வழக்கின் சமீபத்திய தீர்ப்பில், கூட்டாட்சி நீதிமன்றம் (Federal Court) குடிவரவு அதிகாரியின் முடிவை உறுதிசெய்து, இராஜமனோகரனின் கனடாவுக்குள் குடியேறும் முயற்சியை நிராகரித்தது.
இதன் பின்னரே அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியுடன் தொடர்புடைய இந்த தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஒரு வருடத்திற்கு முன்பு, விடுதலைப் புலிகளின் “உறுப்பினர்” எனக் கருதப்பட்ட செந்தூரன் செல்வக்குமரன் என்பவரின் குடிவரவு விண்ணப்பத்தை அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரியின் அலுவலகம் கடிதங்கள் எழுதியதாக தகவல் வெளியாகி இருந்தது.
தற்போது இரண்டாவது முறையாகவும் ரஜினி இராஜமனோகரன் விவகாரத்தில் இத்தகைய குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், அமைச்சரின் பேச்சாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரஜினி இராஜமனோகரனின் வழக்கில் விடுக்கப்பட்ட கோரிக்கைகள், “விண்ணப்பங்களின் நிலை குறித்து அறியும் வழக்கமான பணிகள்” என்றும், அமைச்சரின் அலுவலகம் எந்தவிதமான ஆதரவு கடிதத்தையும் வழங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இராஜமனோகரன் அமைச்சரின் தொகுதியைச் சேர்ந்தவர் அல்ல என்றும், அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, பொதுப் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்ற பிறகு, கேரி ஆனந்தசங்கரி விடுதலைப் புலிகள் மற்றும் உலகத் தமிழர் இயக்கம் (World Tamil Movement) தொடர்பான முடிவுகளில் இருந்து தன்னைப் பொறுப்பு விலக்கிக் கொண்டதாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...
0Shares