இஷாரா செவ்வந்தி வழங்கிய தகவலுக்கமைய பிரதான ஆள் கடத்தல்காரர் கைது

பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவர்களை நாடு கடத்துவதற்கு உதவி செய்த பிரதான ஆல்கடத்தல்காரர் ஒருவர் கிளிநொச்சி பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளுக்காக இஷாரா செவ்வந்தி தலைமறைவாக இருந்த கிளிநொச்சி பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“கணேமுல்ல சஞ்சீவ” படுகொலைசெய்யப்பட்டதையடுத்து இஷாரா செவ்வந்தி சுமார் மூன்று நாட்களாக கிளிநொச்சியில் தலைமறைவாக இருந்துள்ள நிலையில் குறித்த ஆல்கடத்தல்காரரின் உதவியுடன் இந்தியாவிற்கு தப்பிச் சென்று பின்னர் அங்கிருந்து நேபாளத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த ஆல்கடத்தல்காரர் பாதாள உலக கும்பலைச் சேர்ந்த பலரை இந்தியாவுக்கு நாடு கடத்தியுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் மேலும் தெரியவந்துள்ளது.
கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.
சட்டத்தரணிகள் போன்று வேடமணிந்து நீதிமன்றத்துக்குள் நுழைந்த இஷாரா செவ்வந்தி உட்பட இருவரே “கணேமுல்ல சஞ்சீவ” என்பவரை சுட்டுக்கொலை செய்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலைமறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து ஒக்டோபர் 14 கைதுசெய்யப்பட்டார்.
நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி இவ்வாறு கைதுசெய்யப்பட்டார்.
இஷாரா செவ்வந்தியுடன் “கம்பஹா பபா” , “ஜேகே பாய்” உட்பட மேலும் பலர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் ஒக்டோபர் 15 நேபாளம் நோக்கி பயணித்து அவர்களை இரவு நேரத்தில் நாட்டுக்கு அழைத்துவந்தனர்.
நாட்டுக்கு அழைத்துவரப்பட்ட இஷாரா செவ்வந்தி உட்பட அனைவரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...