மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்-வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கி இளஞ்சிவப்பு நிறமாக மாறிய பாராளுமன்றம்

உலகளாவிய மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் அல்லது இளஞ்சிவப்பு மாதமாகக் கருதப்படும் ஒக்டோபர் மாதத்தில் இந்த விழிப்புணர்வூட்டலுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன ஆகியோருக்கு மார்பகப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வூட்டலுக்கான சின்னம் மற்றும் கைப்பட்டி அணிவிக்கும் நிகழ்வு இன்று (22) பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் பிரதி சபாநாயகர் ரிஸ்வி சாலி, குழுக்களின் பிரதித் தவிசாளர் ஹேமாலி வீரசேகர, ஆளும் கட்சியின் முதற்கோலாசான், அமைச்சர் (வைத்தியர்) நலிந்த ஜயதிஸ்ஸ, எதிரிக்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக ஆகியோருக்கு சின்னங்களும் கைப்பட்டிகளும் அணிவிக்கப்பட்டன.
அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்களின் நுழைவாயில் பகுதியில் சகல பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் மார்பகப் புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வூட்டும் வகையிலான சின்னமும் கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன. அத்துடன், ஒன்றியத்தினால் பாராளுமன்ற பதில் செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன மற்றும் உதவிச் செயலாளர் நாயகம் ஹன்ச அபேரத்ன ஆகியோருக்கும் சின்னமும் கைப்பட்டியும் அணிவிக்கப்பட்டன.
இன்றைய தினம் இந்நிகழ்வுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமன்றி பாராளுமன்ற பணியாளர்களும் இளஞ்சிவப்பு நிறத்திலான ஆடையணிந்து வருகை தந்திருந்தனர்.
அத்துடன், பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய மார்பகப் புற்றுநோய் ஒழிப்புக் குறித்த விழிப்புணர்வூட்டல் தொடர்பில் பி.ப 4.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையும் விவாதிக்கப்படவுள்ளது.
உலகம் முழுவதிலும் பெண்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் புற்றுநோயாக மார்பகப் புற்றுநோய் காணப்படுகிறது. இதற்கு அமைய இலங்கையில் நாளாந்தம் 15 புதிய நோயாளர்கள் அடையாளம் காணப்படுவதாகவும் இதில் மூவர் உயிரிழப்பதாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த வைத்தியர்கள் தெரிவித்தனர்.
ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளித்தால் மார்பகப் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும் என்றும், இதற்காக 20 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மாதத்திற்கு ஒரு முறை சுய மார்பகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
அதன்படி, ஒக்டோபர் மாதத்தில் மட்டுமல்ல, இந்தப் பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலம் இந்த சமூகப் பேரழிவை ஒழிக்க வேண்டிய பொறுப்பு பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் உள்ளது என்பதும் வலியுறுத்தப்பட்டது. பாடசாலை மட்டத்தில் இது தொடர்பில் விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும், இளஞ்சிவப்பு புதன்கிழமை (Pink Wednesday) என்ற பெயரில் பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைப்புடன் நாட்டில் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.
பாராளுமன்றத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்கு இணையாக, அனைத்துப் பாடசாலைகளினதும் காலைக் கூட்டங்களில் இவ்விடயம் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வூட்ட பாடசாலை அதிபர்களின் ஊடாக நடவடிக்கை எடுக்குமாறு கல்வி அமைச்சின் செயலாளரிடம் ஒன்றியத்தினால் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெண் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒன்றியத்தின் தலைவர் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ், ஏனைய பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் ஸ்ரீனி அழகப்பெரும, விசேட வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாந்து, இந்திரா புற்றுநோய் அறக்கட்டளையின் தலைவர் லங்கா ஜயசூர்ய திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பகிரவும்...