அயோத்தியில் முதல் ராமாயண மெழுகு சிலை அருங்காட்சியகம்

உத்தர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்டமான கட்டுமானத்திற்கு பிறகு ராமாயண புராணத்தின் கருப்பொருளில் அமைக்கப்பட்ட உலகின் முதல் மெழுகு அருங்காட்சியகம் இங்கு அமைய உள்ளது.
இந்த அருங்காட்சியகத்துக்கான கட்டுமானப் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ள நிலையில் தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்களின் பார்வைக்கு உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் திறந்து வைக்கிறார்.
இந்த மெழுகு சிலை ராமாயண அருங்காட்சியகம், 9,850 சதுர அடி பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. இதற்காக ரூ.6 கோடி செலவிடப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகம், பார்வையாளர்களை ராமாயணம் கதை நிகழ்ந்த திரேதா யுகத்துக்கே நேரடியாக அழைத்து செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தி மையமாகவும், முக்கிய சுற்றுலாத்தலமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் புராணம், தொழில்நுட்பம் மற்றும் கலைத்திறனை இணைக்கும் தனித்துவமான அனுபத்தை வழங்கும் என்று கூறப்பட்டுள்ளது.
புதிய ராமாயண மெழுகு அருங்காட்சியகத்தின் உள்ளே ராமர், சீதா, லட்சுமணர், பரதன், அனுமன், ராவணன், விபீஷணன் உள்ளிட்ட ராமாயணத்தின் முக்கிய கதாபாத்திரங்களின் 50 உயிருள்ள மாதிரி மெழுகு சிலைகள் இடம்பெற்றுள்ளன.
பகிரவும்...