கென்யாவின் முன்னாள் பிரதமரும், நாட்டின் அரசியலில் மிக முக்கியமான நபர்களில் ஒருவருமான ரெய்லா ஓடிங்கா (Raila Odinga தமது 80 ஆவது வயதில் காலமானார்.
உடல்நலக்குறைவு காரணமாக இந்தியாவில் கேரளாவில் உள்ள மருத்துவமனையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் காலமானதாக அவரது உறவினர்கள் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.
கென்ய அரசியலில் மிகப்பெரிய ஆளுமையாகத் திகழ்ந்த ரெய்லா ஓடிங்கா 2008 முதல் 2013 ஆம் ஆண்டுவரை கென்யாவின் பிரதமராக பதவி வகித்தார்.
ஐந்து முறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட அவர், ஒவ்வொரு முறையும் தோல்வியைச் சந்தித்தார்.
இருப்பினும், தேர்தல் முடிவுகளை அவர் நிராகரித்து, வெற்றி திருடப்பட்டு விட்டதாக அடிக்கடி கூறி வந்தார்.
ஜனநாயகச் சுதந்திரங்கள் மற்றும் மனித உரிமைகளுக்காக ரெய்லா ஓடிங்கா அசைக்க முடியாத போராட்டத்தை நடத்தியவர்.
இவர் கென்யாவின் நீண்ட காலம் சிறையில் இருந்த அரசியல் கைதி என்ற பெயரையும் பெற்றுள்ளார்.
ஒரு கட்சி சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகப் போராடியமைக்காக, அவர் இரண்டு முறை (1982-1988 மற்றும் 1989-1991) சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
அதேநேரம், 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட தோல்விக்குப் பின்னர், ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ தலைமையிலான அரசாங்கத்துடன் அவர் இணைந்தார்.
பின்னர், ஆபிரிக்க ஒன்றிய ஆணைக்குழுவின் தலைவர் பதவிக்கு அவர் போட்டியிட்டபோது, ரூட்டோ நிர்வாகம் அவருக்கு ஆதரவளித்தது. எனினும், அந்த தேர்தலில் அவர் ஜிபூட்டியின் மஹ்மூத் அலி யூசோஃபிடம் தோல்வியடைந்தார்.