தாமும் பாதிக்கப் பட்டதாகக் கூறும் ஜனாதிபதி நாம் நிராகரித்த பொறிமுறையையே பலப்படுத்துகிறார் ; வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் ஐ.நா அதிகாரிகளிடம் கடும் அதிருப்தி

வலிந்து காணாமலாக்கப்படல்களால் தாமும் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் எம்மை சந்தித்து எமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை. மாறாக நாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக அதிகாரி மற்றும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளிடம் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடருக்கு சமாந்தரமாக ஐ.நாவின் கிளை அமைப்புக்களில் ஒன்றான வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டம் கடந்த செப்டெம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் செப்டெம்பர் 26 – 29 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை விவகாரம் குறித்து ஆராயப்பட்டது.
இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக இலங்கையைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் ஆ.லீலாதேவி மற்றும் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட ஆகியோர் சர்வதேச மன்னிப்புச்சபையினாலும், வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த சிங்களப்பெண்கள் இருவர் மற்றும் தமிழ் பெண்கள் இருவர் என மொத்தமாக நால்வர் சுவிஸ்லாந்து தூதரகத்தினாலும் ஜெனிவாவுக்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதன்படி மேற்கூறப்பட்டவாறு இலங்கை விவகாரம் ஆராயப்படுவதற்கு முன்னைய தினம் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் பிரதிநிதிகளுக்கும் இலங்கையில் இருந்து சென்ற பாதிக்கப்பட்ட தரப்பினருக்கும் இடையிலான சந்திப்பொன்று நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது மறுநாள் இலங்கை அரசாங்கத்திடம் கேட்கப்படவேண்டும் எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் கருதும் கேள்விகள் தொடர்பில் ஐ.நா அதிகாரிகள் கேட்டறிந்துகொண்டனர்.
அவ்வதிகாரிகளிடம் தம்மால் முன்வைக்கப்பட்ட பல கேள்விகள் மறுநாள் கூட்டத்தில் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் பங்கேற்ற நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையிலான குழுவினரிடம் வினவப்பட்டதாக சுட்டிக்காட்டிய லீலாதேவி, இருப்பினும் இறுதிக்கட்டப்போரின்போது படையினரிடம் சரணடைந்தோரின் பெயர்ப்பட்டியல் மற்றும் குறிப்பாக பலர் சரணடைந்த 4 இடங்களுக்குப் பொறுப்பாக இருந்த இராணுவ அதிகாரிகளை விசாரணைக்கு உட்படுத்தல் என்பன தொடர்பில் தாம் முன்மொழிந்த கேள்வி அரசாங்கத்திடம் கேட்கப்படாமை தமக்கு மிகுந்த கவலையளிப்பதாகத் தெரிவித்தார்.
அதேவேளை மேற்குறிப்பிட்ட கூட்டத்துக்கு அப்பால், பாதிக்கப்பட்ட தரப்பினர் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலக அதிகாரியையும், இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் அதிகாரிகளையும் சந்தித்துக் கலந்துரையாடினர்.
இதன்போது வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் என்ற ரீதியில் தமது கோரிக்கைகள், உள்ளகப்பொறிமுறை மீதான நம்பிக்கை இழப்பு மற்றும் தற்போதைய அரசாங்கம் இவ்விவகாரத்தைக் கையாளும் விதம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவ்வதிகாரிகளிடம் எடுத்துரைத்தனர்.
அதுமாத்திரமன்றி தாமும் வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க கூறுகின்ற போதிலும், அவர் ஆட்சிபீடமேறியதன் பின்னர் தம்மை சந்தித்து தமது நிலைப்பாட்டைக் கேட்டறியவில்லை எனவும், மாறாக தாம் நிராகரித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தை மேலும் பலப்படுத்தும் நடவடிக்கைகளையே அவர் முன்னெடுக்கிறார் எனவும் அவ்வதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட தரப்பினர் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பகிரவும்...