ஆசிரியர்களின் எதிர்ப்பால் பின்கதவால் வௌியேறிய வட மாகாண ஆளுநர்

வட மாகாண கல்வி திணைக்களம் சேவையின் தேவை கருதி என மேற்கொண்ட ஆசிரிய இடமாற்றம் பாரபட்சமானதும், பழிவாங்கல் நோக்கம் கொண்டதாகும் எனக் கூறி இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று போராட்டத்தில் ஈடுபட்டது.
அவ்வாறான இடமாற்றத்தை நிறுத்தி அது தொடர்பில் மீள் பரிசீலனை மேற்கொள்ள வேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைமையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மூன்றாவது நாளாக இன்றும் (15) போராட்டத்தை முன்னெடுத்தனர்.
இன்றையதினம் மதியம் ஆளுநர் செயலகத்தை அவர்கள் முற்றுகையிட்ட நிலையில் அங்கு போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.
இதனிடையே வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் பணிப்பாளர் ஜெயச்சந்திரன் மற்றும் வட மாகாணத்தில் உள்ள அனைத்து கல்வி வலயங்களின் பணிப்பாளர்கள் என அனைவரும் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்துக்கு அழைக்கப்பட்டு கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
பின்னர் அதிகாரிகள் அனைவரும் கலந்துரையாடல் முடிந்து வெளியேறினர்.
இறுதியாக வடக்கு கல்வி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிரஞ்சன் வெளியேறியபோது போராட்டக்காரர்கள் அவரை வழிமறித்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பில் ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வ அறிவிப்பை வௌியிடும் என அவர், போராட்டக்காரர்களிடம் தெரிவித்திருந்தார்.
எனினும் பிற்பகல் கடந்த போதிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு ஆளுநர் செயலகத்தில் கலந்துரையாடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதால் மீண்டும் அமைதியின்மை ஏற்பட்டது.
இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் ஆளுநர் செயலகத்திற்குள் உட்பிரவேசிக்க முற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
குறித்த சந்தர்ப்பத்தில் வட மாகாண ஆளுநர் அவரது செயலகத்தின் பின்புற வாயிலில் வௌியேறியதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின் பின்னர் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட சிலருக்கு ஆளுநரின் செயலாளருடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்கப்பட்டது.
எனினும் அந்த கலந்துரையாடலில் எந்தவொரு இணக்கப்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என்பதுடன் நாடளாவிய ரீதியில் இதற்கு தமது தொழிற்சங்க ரீதியான பதில் வழங்கப்படும் என்றும் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.
பகிரவும்...