Main Menu

சிறைச்சாலைகளில் 34765 கைதிகள் தடுத்து வைக்கப் பட்டுள்ளனர் – நீதியமைச்சர்

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இன்றளவில் (2025.09.23 ஆம் திகதி வரையான காலப்பகுதி)  நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 10,509 கைதிகளும், சந்தேகத்தின் அடிப்படையில் 24,256 கைதிகளும்  என்ற அடிப்படையில்  மொத்தமாக 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு  அமைச்சர்  ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (08) நடைபெற்ற அமர்வில் வாய்மூல  விடைக்கான வினாக்கள் வேளையின் போது  தேசிய மக்கள் சக்தியின் குருநாகல்  மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  தர்மப்பிரிய திஸாநாயக்க முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு  அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் இன்றளவில் (2025.09.23 ஆம் திகதி வரையான காலப்பகுதி)  நீதிமன்றத்தால் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட 10,509 கைதிகளும், சந்தேகத்தின் அடிப்படையில் 24,256 கைதிகளும்  என்ற அடிப்படையில்  மொத்தமாக 34,765 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

சிறைச்சாலைகளில்  20 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர்  எந்த கைதிகளும் விடுவிக்கப்படவில்லை. அவ்வாறான சட்ட ஏற்பாடுகள் ஏதும் கிடையாது.  நீதிமன்றத்தால் மரண தண்டனை, ஆயுள் தண்டனை மற்றும் குறித்த காலத்தை வரையறுத்து தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகள் சிறைச்சாலைகளில்  இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

மரண   தண்டனை மற்றும் ஆயுள் தண்டனை கைதிகளை தவிர்த்து  குறுகிய காலம் என்ற அடிப்படையில் தண்டனை தீர்ப்பளிக்கப்பட்ட கைதிகளுக்கு  சிறைச்சாலை சட்டத்தின் 302 பிரிவின் பிரகாரம் தண்டனை காலம் குறைக்கப்படுகிறது. அதுவும் நீதிமன்றத்தின்  வழிகாட்டலுக்கு அமைவாகவே இடம்பெறுகிறது.

சிறைக்கைதிகளைத் தவிர அபராதம்  செலுத்த முடியாமல் நீண்ட காலமாக  சிறைச்சாலைகளில் 2,122 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் விடயத்தில்  நியாயமான மற்றும் முறையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அரசியலமைப்பு சட்டத்தின்  34  பிரிவின் பிரகாரம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கமைய    சிறு குற்றங்கள் மற்றும்  அபராதம் விதிக்க முடியாமல் சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளில்  சட்ட வழிமுறைகளுக்கு அமைய தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கு விசேட தினங்களில் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது.

சிறைக்கைதிகளும் மனிதர்களே என்பதை  பேச்சளவில் மாத்திரம் குறிப்பிட முடியாது. சிறைச்சாலைகளுக்குள் கைதிகள் பாரிய நெருக்கடிகளை எதிர்கொள்வது காலம் காலமாகவே குறிப்பிடப்படுகிறது. முறையற்ற வகையில் செயற்படும் சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்களுக்கு எதிராக  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்.

பகிரவும்...
0Shares