Main Menu

முல்லைத்தீவில் வெளிச்சவீடு அமைக்குமாறு ரவிகரன் எம்.பி கோரிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வெளிச்சவீடு இன்மையால் மீனவர்கள் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாகச் சுட்டிக்காட்டிய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், எனவே முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்று அமைக்கப்படவேண்டுமென கடற்றொழில் அமைச்சிடம் கோரிக்கைவிடுத்துள்ளார்.

இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுவில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அனுப்புமாறும், தம்மால் வெளிச்சவீடு அமைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றக் கட்டடத்தொகுதியில் செவ்வாய்க்கிழமை (09)  இடம்பெற்ற கடற்றொழில் அமைச்சின் ஆலோசனைக்குழுக் கூட்டத்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இக்கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மணற்குடியிருப்பு கடற்கரைப்பகுதியில் கடந்த 1950ஆம் ஆண்டு காலப்பகுதியில் கட்டப்பட்ட வெளிச்சவீடொன்று காணப்பட்டது.

இந்த வெளிச்சவீட்டினால் முல்லைத்தீவு மாவட்டத்தின் 74கிலோமீற்றர் தூரமான கரையோரத்தில் கொக்கிளாய் தொடக்கம் பேப்பாரப்பிட்டிவரையிலுள்ள மீனவர்கள் பயனடைந்தவந்தனர்.

குறித்த வெளிச்சவீட்டின் உதவியுடனேயே மீனவர்கள் தொழிலுக்குச் சென்று தமது மீன்பிடித் துறைகளுக்கு கரைதிருப்பிவந்தனர்.

இவ்வாறாக மீனவர்களுக்கு பெரும் வரப்பிரசாதமாகவிருந்த இந்த வெளிச்சவீடு கடந்த 2004ஆம் ஆண்டு இடம்பெற்ற சுனாமி அனர்த்தத்துடன் முற்றாக அழிவடைந்துள்ளது.

எனவே முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது மீனவர்கள் வெளிச்சவீடின்றி பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர்.

எனவே மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்தில்கொண்டு கடற்றொழில் அமைச்சு முல்லைத்தீவில் வெளிச்சவீடொன்றை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென கோரிக்கைவிடுத்தார்.

இந்நிலையில் வெளிச்சவீடு அமைப்பதுதொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் தீர்மானமொன்றை நிறைவேற்றி அனுப்புமாறும், குறித்த வெளிச்ச வீடு அமைப்பது தொடர்பில் தம்மால் நடவடிக்கை எடுக்கப்படுமென கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மற்றும் பிரதி அமைச்சர் ரத்ன கமகே ஆகியோரால் தெரிவிக்கப்பட்டது.

பகிரவும்...
0Shares