மீண்டும் ஒன்றுகூடிய எதிர்க் கட்சிகள்

எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள், இன்று மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
கடந்த 25ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தின்போது எடுக்கப்பட்டிருந்த தீர்மானத்தின் அடிப்படையில் இன்றைய கூட்டம் இடம்பெற்றுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் கடந்த 25ஆம் திகதி கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ரஞ்சித் மத்தும பண்டார, கபீர் ஹஷிம் மற்றும் பழனி திகாம்பரம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ருவான் விஜேவர்தன, காவிந்த ஜயவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, ஜி.எல். பீரிஸ் மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் குறித்த கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.
அனைத்து எதிர்க்கட்சி அரசியல் கட்சிகளுடனும் ஒரு குறுகிய கால மற்றும் நீண்டகால திட்டத்தை செயல்படுத்துவதற்காக அன்றைய கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார்.
நாட்டில் ஜனநாயக அரசியலுக்கு உள்ள சவாலை முறியடிப்பது தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் அரசியல் கருத்துக்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண்டும் என்று அன்றைய கூட்டத்தில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் எதிர்கால பணிகளுக்காக கட்சி செயலாளர்களின் பங்கேற்புடன் ஒரு நடவடிக்கைக் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...