Main Menu

ரணிலின் உடல்நிலை முக்கியம் – பிணையில் செல்ல அனுமதிக்குமாறு கோரிக்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிணை மனு மீதான உத்தரவு இன்னும் அறிவிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த பிணை மனு தொடர்பான விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர முன்னிலையில் பரிசீலிக்கப்பட்டது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் சார்பாக முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் சந்தேகநபருக்கு எதிராக சாட்சியங்களை முன்வைப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
எனினும் விசாரணை முடிவடையாத காரணத்தால் சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் நீதிமன்றத்தை கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சந்தேகநபர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன, நீதிமன்றத்தில் கருத்துக்களை முன்வைத்ததுடன் சந்தேகநபரின் உடல்நிலை மற்றும் அவரது மனைவியின் உடலநிலையை கருத்தில் கொண்டு அவரை பிணையில் விடுவிக்குமாறு கோரியுள்ளார்.
இருப்பினும், பிணை விண்ணப்ப அறிவிப்பு அரை மணி நேரத்திற்கு ஒத்திவைக்கப்படுவதாக நீதவான் நிலுபுலி லங்காபுர தெரிவித்திருந்த நிலையில், மேலும் மின் தடை காரணமாக பிணை உத்தரவு இன்னும் அறிவிக்கப்படவில்லை என கூறப்படுகின்றது.
பகிரவும்...