Main Menu

பணயக் கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைப்பதற்கு ஹமாஸ் தயார்

இஸ்ரேல் விமானதாக்குதல்களை நிறுத்தி காசாவிற்கான மனிதாபிமான விநியோக பாதையொன்றை நிரந்தரமாக திறந்துவிடுவதற்கு இணங்கினால்  தன்னிடமுள்ள பணயக்கைதிகளிற்கு உணவு வழங்கும் விடயத்தில் ஒத்துழைக்க தயார் என ஹமாஸ் அமைப்பு  தெரிவித்துள்ளது.

ஹமாசிடம் சிக்குண்டுள்ள இஸ்ரேலிய பணயக்கைதிகள் பட்டினியால் வாடுவதை காண்பிக்கும் வீடியோ வெளியானதை தொடர்ந்து சர்வதேச கண்டனங்கள்  எழுந்துள்ள நிலையிலேயே  ஹமாஸ் இதனை தெரிவித்துள்ளது.

2023ம் ஆண்டு முதல் ஹமாசிடம் பணயக்கைதியாக உள்ள எவ்யட்டார் டேவிட்டின் வீடியோவே வெளியாகியுள்ளது.24வயது டேவிட் எலும்பும்தோலுமாக   காணப்படுகின்றார்.

இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து கடும் கண்டனங்கள் வெளியாகியுள்ளன, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார  தலைவர் இந்த காணொளி பயங்கரமானது என தெரிவித்துள்ளதுடன் ஹமாசின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்துகின்றது என தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளித்து ஹமாசின் இராணுவபேச்சாளர் அபுஒபெய்தா பிடிபட்டுள்ள எதிரிகளிற்கு உணவு மருந்து பொருட்களை வழங்குவதற்கான சர்வதேச செஞ்சிலுவை குழுவின் வேண்டுகோள்களை சாதகமாக பரிசீலிக்க தயார் என தெரிவித்துள்ளார்.

எனினும் சில நிபந்தனைகளை விதித்துள்ள அவர் மனிதாபிமான விநியோகம் இடம்பெறும் போது இஸ்ரேல் விமானதாக்குதலை நிறுத்தவேண்டும்,காசாவிற்குள் மனிதாபிமான விநியோகத்தை மேற்கொள்வதற்கான நிரந்தர பாதையை திறந்துவிடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

கடந்த 24 மணிநேரத்தில் காசாவில் பட்டினிமற்றும் போசாக்கின்மையால் மேலும் ஆறுபேர் உயிரிழந்துள்ளனர் என காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

காசாவில் பெரும் பஞ்சம் பட்டினிநிலை காணப்படுவதாக பல சர்வதேச அமைப்புகள் எச்சரித்துள்ளன.

பகிரவும்...