Main Menu

முன்னாள் ஜனாதிபதிகளுக்-கான விசேட சலுகைகள் ரத்து செய்யப்படும் – சட்டமூல வரைவு வெளியீடு

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்தற்கான சட்டமூலம் வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் பணிப்புக்கமைய இந்த வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அவர்களது விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் அரச உத்தியோகபூர்வ இல்லம், மாதாந்த கொடுப்பனவு, செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு, உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு வசதி வழங்கள் என்பன இதனூடாக நிறுத்தப்படவுள்ளது.

அத்துடன் முன்னாள் ஜனாதிபதியின் மனைவிக்கு செலுத்தப்பட்ட மாதாந்த கொடுப்பனவு இச்சட்டமூலத்தின் ஊடாக நிறுத்துவதற்கு சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1986 ஆம் ஆண்டு 04 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டத்தை இரத்துச் செய்யும் பொருட்டு இச்சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சட்டமூலம் 2025 ஆம் ஆண்டு ….. இலக்க ஜனாதிபதிகளின் உரித்து (இரத்துச் செய்தல்) சட்டம் என்று அடையாளப்படுத்தப்படும்.

(இதனகத்துப்பின்னர் ‘இரத்துச் செய்யப்பட்ட சட்டம்’ என்று அடையாளப்படுத்தப்படும்)1986 ஆம் ஆண்டு 4 ஆம் இலக்க ஜனாதிபதிகளின் உரித்து சட்டம் இந்த சட்டமூலத்தின் ஊடாக இரத்துச் செய்யப்படும்.

சந்தேகத்தை நீக்கிக் கொள்ளும் பொருட்டு, இந்த சட்டத்தை செயற்படுத்தும் ஆரம்ப தினத்துக்கு முன்னர், இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 2 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு வழங்கப்படும் ஏதேனும் வீடு அல்லது செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு,

இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் ஏற்பாடுகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் செயலாளருக்கான மாதாந்த கொடுப்பனவு மற்றும் உத்தியோகபூர்வ வாகனங்கள் மற்றும் வேறு சகல வசதிகள் மற்றும்,

இரத்துச் செய்யப்படும் சட்டத்தின் 4ஆம் பிரிவின் ஏற்பாடுகளுக்கமைய முன்னாள் ஜனாதிபதிகள் அல்லது முன்னாள் ஜனாதிபதிகளின் விதவையான மனைவியருக்கு செலுத்தப்படும் மாதாந்த கொடுப்பனவு என்பன நிறுத்தப்படும்.

பகிரவும்...
0Shares