Main Menu

சர்வதேச விசாரணையை வலியுறுத்தும் சர்வதேசம்

யாழ்ப்பாணம் – செம்மணி, சித்துப்பாத்தி மனித புதைகுழி, தமிழ் மக்கள் எதிர்கொண்ட பல தசாப்த கால வலியையும், மௌனத்தையும் பறைசாற்றுவதாக, பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா (Dame Siobhain McDonagh) தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் உண்மை, பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை வழங்க சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரியுள்ளார்.
சித்துப்பாத்தி மனித புதைகுழியில் இருந்து மீட்கப்படும் என்புக்கூடுகள், அரச சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, இந்த என்புக்கூடுகளின் சாட்சியங்களை சிதைத்து, அழிக்கப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளதாகவும், பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் கூறியுள்ளார்.
2021 ஆம் ஆண்டு ஏற்றுக்கொள்ளப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு அமைய, இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் குற்றங்கள் தொடர்பான தகவல்களையும், ஆதாரங்களையும் சேகரித்து, ஒருங்கிணைத்து, பகுப்பாய்வு செய்து அவற்றை பாதுகாக்க சர்வதேச சமூகத்திற்கு அதிகாரம் உள்ளது.
அந்தவகையில், ஐக்கிய நாடுகள் சபை இதற்கான ஆணையை பிறப்பிக்க வேண்டிய நேரம், தற்போது வந்துள்ளதாக சியோபைன் மெக்டோனா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு, இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செம்மணி படுகொலையுடன் தொடர்புடையவர்களை, நீதியின் முன் நிறுத்துவதற்கான, சர்வதேச விசாரணை ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும், பிரித்தானியாவின் தமிழர்களுக்கான அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் தலைவர் டேம் சியோபைன் மெக்டோனா வலியுறுத்தியுள்ளார்.
பகிரவும்...
0Shares