செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 33 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்
யாழ் செம்மணி சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியில் இன்று(29) வரையில் 33 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதேவேளை புதைகுழி ஒன்றில் இருந்து பை ஒன்றும் சிறு துணித்துண்டு ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை காலமும் புதைகுழியில் இருந்து வேறு பொருட்கள் எவையும் மீட்கப்படாத நிலையில் இன்று பை ஒன்றும் துணி ஒன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
செம்மணி மனிதப் புதைகுழியில் இராண்டாம் கட்ட அகழ்வுப் பணியின் நான்காம் நாள் பணிகள் இன்று முன்னெடுக்கப்பட்டபோது மேலும், மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி அகழ்வுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் இன்று வரையில் 33 மனித எலும்புக் கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 22 எலும்புக் கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை, செய்மதி படங்கள் ஊடாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதற்கு ஏதுவாக அப்பகுதிகள் துப்புரவு செய்யப்பட்டுள்ள நிலையில் அடுத்து வரும் நாட்களில் அவ்விடத்தில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை மனித புதைகுழி காணப்படும் இடத்தில் உள்ள மண் மாதிரிகள் பரிசோதனைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அகழ்வுப் பணிகளுக்கான செலவீன பாதீடாக 12 மில்லியன் வழங்கப்பட்ட போதிலும், அதற்கு அண்மித்த தொகையே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இன்று அகழ்வுப் பணிகள் மதியம் 1 மணியுடன் நிறைவு பெற்றதுடன், நாளை காலையிலும் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...