இலங்கை கடற்பரப்பில் பயணித்த கப்பலில் சீன பிரஜைக்கு சுகயீனம் : வைத்திசாலையில் அனுமதித்த இலங்கை கடற்படை
இலங்கையின் தெற்கே காலியில் இருந்து 63 கடல் மைல் (சுமார் 116 கி.மீ) தொலைவில் பயணித்த MV AE Neptune என்ற கப்பலின் பணிக்குழுவைச் சேர்ந்த சீன பிரஜையொருவர் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இலங்கை கடற்படையின் உதவியுடன் கரைக்குக் கொண்டுவந்து காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) இடம்பெற்றுள்ளது.
இலங்கையின் தென் கடற்பகுதியில் பயணித்து கொண்டிருந்த MV AE Neptune கப்பலின் பணிக்குழுவில் இருந்த சீன நாட்டவர் ஒருவர் கப்பலின் இயந்திர அறையில் மயங்கி விழுந்து ஆபத்தான நிலையில் இருந்துள்ளார்.
அந்த சீன நபரை கரைக்கு கொண்டு வர இலங்கை கடற்படையினை உதவுமாறு, அந்த கப்பலில் இருந்து கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு அறிவிப்பு வழங்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்கு கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்புப் பிரிவினர் உடனடியாக பதிலளித்தனர். ஆபத்தான நிலையில் இருந்த நோயாளியைக் கரைக்குக் கொண்டுவருவதற்கு மருத்துவக் குழுவுடன் இலங்கை கடற்படைக் கப்பலை அனுப்ப ஒருங்கிணைப்பு மையம் ஏற்பாடு செய்தது.
அமதன்படி, நோயாளியை ஏற்றிச் சென்ற MV AE Neptune கப்பல் காலி துறைமுகத்திற்கு அருகில் வந்தடைந்த பின்னர், நோயாளி கப்பலில் இருந்து இலங்கை கடற்படைக் கப்பலுக்கு மாற்றப்பட்டார்.
பின்னர், சுகயீனமடைந்த சீனப் பிரஜைக்கு அடிப்படை முதலுதவிகளை வழங்கிய இலங்கை கடற்படையினர் அவரை காலி துறைமுகத்திற்கு அழைத்து வந்து மேலதிக சிகிச்சைக்காக காலி கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதித்தனர்.
பகிரவும்...