Main Menu

இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்த “ ஈ – லேர்னிங்” தளம் அறிமுகம்

பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயமும் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையும் (SLTDA) இணைந்து இலங்கையின் சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு விழிப்புணர்வை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ஈ – லேர்னிங் (e-Learning ) என்ற தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளன.

ஐக்கிய இராச்சியத்தின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் (ACT) முன்முயற்சியின் முன்மாதிரியாக, இந்த  நிகழ்நிலை பாடநெறியானது சுற்றுலா வாண்மையாளர்கள் எதிர்நோக்கும் சாத்தியமான அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து நிவர்த்தி செய்யும் திறன்களை வழங்குவதுடன் நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கும் உள்ளூர் வாசிகளுக்கும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்கிறது.

புதன்கிழமை (05) இடம்பெற்ற வெளியீட்டு நிகழ்வில் சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க மற்றும் இலங்கைக்கான பதில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் லிசா வண்ஸ்டால் (Lisa Whanstall) ஆகியோர் கலந்துகொண்டனர். சுற்றுலாத்துறை, அவசர சேவைகள் மற்றும் அரச நிறுவனங்களின் முக்கிய பங்குதாரர்களும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்ட சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் பேராசிரியர் ருவன் ரணசிங்க கருத்துத் தெரிவிக்கையில்,

“ இலங்கையின் சுற்றுலாத்துறை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதால் பாதுகாப்பின் முக்கியத்துவம் அவசியமானது. சுற்றுலாத்துறை  நமது பொருளாதாரத்திற்கு இன்றியமையாதது, எனவே, சுற்றுலாத்துறைக்கு வருகை தருவோருக்கும்  உள்ளூர்வாசிகளுக்கும் பாதுகாப்பான சூழல் அவசியம். இத் திட்டம் எதிர்கால சவால்களுக்கு மத்தியில் நமது தொழில்துறையை தயார்படுத்துவதற்கான ஒரு முக்கியமான படியாகும்.” என்றார்.

பதில் பிரித்தானிய  உயர் ஸ்தானிகர் லிசா வான்ஸ்டால் (Lisa Whanstall)  கருத்துத் தெரிவிக்கையில்,

“இலங்கையின் சுற்றுலாத் திறனை மேம்படுத்த இங்கிலாந்து நிபுணத்துவத்தை வழங்குவதையிட்டு நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இந்த பயிற்சி சுற்றுலாத் துறையில் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்தவும், பாதுகாப்பு விழிப்புணர்வில் நம்பிக்கையை வளர்க்கவும் உதவும். இது உள்ளூர் சமூகங்களுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் முக்கியமானது என்பதை நாங்கள் அறிவோம். எதிர்வரும் வருடங்களில் பிரித்தானிய  சுற்றுலாப் பயணிகளின்  எண்ணிக்கை தொடர்ந்து உயரும் என்று நாம் நம்புகிறோம்.” என்றார்.

இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தவிசாளர் புத்திக ஹெவாவசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ பாதுகாப்பிற்கான அமைப்புகளின் உறுதிப்பாட்டை வலியுறுத்துகின்றேன். இலங்கையின் சுற்றுலாத் துறையில் மீள் வளர்ச்சியை நாங்கள் நோக்கும்போது, சுற்றுலாப்பயணிகளினதும்  ஊழியர்களினதும்  பாதுகாப்பு என்பன முன்னுரிமைகளாக இருக்கின்றன. இந்த eLearning பாடநெறி எங்கள் தொழில் வாண்மையாளர்களின் பாதுகாப்பு அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து பதிலளிக்க அதிகாரம் அளிக்கும், மேலும் எங்கள் தொழில்துறையின் திறனில் அதிக நம்பிக்கையை வளர்க்கும்.” என குறிப்பிடப்பட்டுள்ளது.

e-Learning   தளத்தின் முக்கிய அம்சங்கள்

பன்மொழி அணுகல்: பரந்த அணுகலுக்காக சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தகவல்கள் கிடைக்கின்றன.

விரிவான உள்ளடக்கம்: சந்தேகத்திற்கிடமான நடத்தை உள்ளடங்கலாக இனம்காணல், பாதிப்புகளை அடையாளம் காண்பது மற்றும் சாத்தியமான அச்சுறுத்தல்களை நிர்வகித்தல் ஆகியவற்றை உள்ளடக்குகின்றது.

சான்றிதழ்: பாடநெறி  நிறைவேறியதும் பங்கேற்பாளர்கள் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை மற்றும்   பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயம் கூட்டாக வழங்கிய சான்றிதழ்களைப் பெறுவார்கள்.

நெகிழ்வான கற்றல்: எந்த நேரத்திலும் 60-90 நிமிட ஒன்லைன் பாடநெறியை அணுக முடியும்

⦁ அனைவரும் அணுக முடியும்: சுற்றுலாத் துறையில் செயற்படும் ஹோட்டல் உரிமையாளர்கள் முதல் சுற்றுலா வழிகாட்டிகள் வரை அனைவருக்கும் ஏற்றதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.  

பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கும், பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க இடமாக இலங்கையின் நற்பெயரை உயர்த்துவதற்கும், தொடர்ச்சியான முயற்சியின் ஒரு பகுதியாக e-Learning தளம், செயற்படும். சாத்தியமான பாதுகாப்பு சவால்களுக்காக தங்கள் அணிகளை சிறப்பாகத் தயாரிக்கவும், ஒட்டுமொத்த பாதுகாப்புத் தரங்களை மேம்படுத்தவும் சுற்றுலா வாண்மையாளர்கள்  ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பகிரவும்...