செம்மணி புதைகுழியில் சிறார்களின் பாற்பற்கள்! – சட்டமருத்துவ அதிகாரி அறிக்கை

யாழ்ப்பாணம் – அரியாலை சித்துப்பாத்தி புதைகுழிக்குள் இருந்து மீட்கப்பட்ட சிதிலங்களில் பெருமளவானவை மனித என்புத் தொகுதிகள் என்றும், அவற்றில் சிறார்களின் பாற்பற்களும் உள்ளடங்குகின்றன என்றும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் சட்டமருத்துவ அதிகாரி அறிக்கையிட்டுள்ளார்.
அரியாலை செம்மணி பகுதியில் உள்ள சித்துப்பாத்தி மயானத்தில் அபிவிருத்திப் பணிகளுக்காக நல்லூர் பிரதேச சபையினர் அண்மையில் கிடங்குகளை வெட்டியபோது அதற்குள் இருந்து மனிதச் சிதிலங்கள் எனச் சந்தேகிக்கப்படும் பொருள்கள் மீட்கப்பட்டிருந்தன.
இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் வழங்கப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய மேலதிக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா கடந்தவாரம் சம்பவ இடத்தை நேரடியாகப் பார்வையிட்டிருந்தார்.
இதன்போது, குறித்த கிடங்குக்குள் இருந்து மீட்கப்பட்ட சிதிலங்கள் மனித என்புத்தொகுதிகளா? என்பதை உறுதிப்படுத்த பகுப்பாய்வு நடத்துமாறும், அந்தப் பகுதிகளில் விரிவான ஸ்கான் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தியிருந்தார்.
நீதவானின் அறிவுறுத்தலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட பகுப்பாய்வு அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அதில், மீட்கப்பட்ட சிதிலங்கள் மனித என்பு எச்சங்களே என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் பாற்பற்களும், அந்த மனித என்பு எச்சங்களுடன் சேர்ந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன.