தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மாவையின் அர்ப்பணிப்பு பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டும் ; பிரதமர்

தமிழ் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் மாவை.சேனாதிராஜாவின் அர்ப்பணிப்பும் ஈடுபாடும் இலங்கை அரசியல் வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளனர்.
மாவை.சேனாதிராஜாவின் மறைவையொட்டி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளதோடு அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மக்கள் சேவைக்காக தனது வாழ்வை அர்ப்பணித்த சிரேஷ்ட அரசியல் தலைவரான மாவை சேனாதிராஜாவின் மறைவை அறிந்து நான் மிகவும் வருத்தமடைகிறேன்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஒரு முக்கிய ஆளுமையாகவும் திகழ்ந்த சேனாதிராஜா, இன ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட அதே வேளையில், தனது மக்களின் உரிமைகள் மற்றும் அபிலாஷைகளுக்காக ஒரு முன்னணிப் பங்கை வகித்தார்.
ஜனநாயக நடவடிக்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு மற்றும் அமைதியான அரசியல் இயக்கத்தின் மீது அவருக்கு இருந்த உறுதியான நம்பிக்கை ஆகியவை பாராளுமன்றத்தில் அவரது பல தசாப்த கால சேவைக் காலத்தில் சிறப்பாக பிரதிபலித்தது.
அவரது மறைவு அவரை அறிந்த மற்றும் அவருடன் பணியாற்றிய அனைவருக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். அவரது மறைவினால் வாடும் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அவரை இழந்து வாடும் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நீதி மற்றும் சமத்துவத்தை நிலைநாட்ட பாடுபடும் எதிர்கால தலைமுறையினருக்கு அவர் பற்றிய நினைவுகள் ஆசீர்வாதமாக அமைய வேண்டுமென பிரார்த்திக்கிறேன் என்றார்.
பகிரவும்...