கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளை சுற்றுலாப் பயணிகளுக்காக மாற்றியமைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

கிளிநொச்சி குளத்தை அண்டிய பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் நேற்று (28) நடைபெற்றது.
கிளிநொச்சி குளத்தின் கீழ்ப்புறமாக உள்ள கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட கட்டடத்தினை SY NIRO COOL CAFE நிறுவனம் குத்தகை அடிப்படையில் பெற்றுக்கொண்டுள்ளது.
இந்த பகுதிகளை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் முகமாக கிளிநொச்சி குளத்தினுள் விசைப்படகு (super boat), துடுப்பு படகு (padpaddele boat) ஆகிய பொழுதுபோக்கு படகுச் சேவைகளை நடாத்துவதற்கும் அதனை அண்டிய பகுதியினை கவர்ச்சிகரமாக மாற்றியமைப்பதற்கும் அனுமதி தருமாறு கோரியுள்ளனர்.
இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆராயும் நோக்கில், இந்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரனின் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது SY NIRO COOL CAFE நிறுவனத்தினர் தமது திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியிருந்தனர்.
தொடர்ந்து துறை சார்ந்த திணைக்களத் தலைவர்களின் கருத்துப் பகிர்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தெரிவிக்கையில்,
இப்பிரதேசத்தின் வாழ்வாதாரம் மற்றும் வீதி போக்குவரத்து தடைப்படாத வகையில் இதனை வடிவமைக்க வேண்டும். இப்பகுதிகளில் சட்டவிரோத செயற்பாடுகளை குறைப்பதை நோக்காக கொண்டிருப்பதுடன் எவ்வகையிலும் அதனை அதிகரிப்பதற்கு இடமளிக்கக்கூடாது.
மேலும் இதனுடன் பல திணைக்களங்கள் சம்பந்தப்படுவதால் தங்களது திட்டத்தில் உள்ளடங்குகின்ற விடயங்களை தெளிவாக எழுத்து மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ஏனெனில், அந்தந்த விடயங்களில் திணைக்களங்களுக்குரிய விதிமுறைகளை குறித்த திணைக்களங்கள் ஊடாக பெற்றுக்கொள்வது அவசியமானதாகும். இவற்றை கருத்திற்கொண்டு இத்திட்டத்தை சிறப்பாக செயற்படுத்த முடியும் என தெரிவித்தார்.
கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், கரைச்சி பிரதேச செயலாளர், பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், தேசிய நீர் வளங்கள் அதிகார சபையின் பொறியியலாளர், உள்ளூராட்சி திணைக்களத்தின் உதவி ஆணையாளர், கரைச்சி பிரதேச சபைச் செயலாளர், மாவட்ட செயலக மற்றும் கரைச்சி பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், NAQDA நிறுவனத்தின் பொறுப்பதிகாரி, பொதுச் சுகாதார உத்தியோகத்தர், கிளிநொச்சி குளத்தின் நன்னீர் மீன்பிடிச் சங்க அங்கத்தவர்கள், விடய உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
பகிரவும்...