புலமைப்பரிசில் பரீட்சை – விடைத்தாள் திருத்தும் பணிகள் அடுத்த வாரம் ஆரம்பம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன் குறித்த பணிகள் எதிர்வரும் 12 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
அதன்படி, குறித்த விடைத்தாள் திருத்தும் பணிகள் விரைவாக முன்னெடுக்கப்பட்டு பெறுபேறுகள் வழங்கப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி 2,849 பரீட்சை மத்திய நிலையங்களில், 2024 ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை நடத்தப்பட்டதுடன், அதில் 323,879 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தனர்.
குறித்த பரீட்சையின் முதல் பகுதி வினாத்தாளில் 3 வினாக்கள் பரீட்சைக்கு முன்னதாகவே கசிந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது
இது தொடர்பாகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பான உத்தரவு ஒன்றைக் கடந்த டிசம்பர் மாதம் 31ஆம் திகதி உயர்நீதிமன்றம் அறிவித்தது.
குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காண நியமிக்கப்பட்ட நிபுணர் குழு முன்வைத்த மூன்று பரிந்துரைகளில் மிகவும் பொருத்தமான ஒன்றைத் தெரிவு செய்து அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகத்திற்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைய, ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாம் பகுதி வினாத்தாளில் கசிந்த 3 வினாக்களுக்கும் முழுமையான புள்ளிகளை வழங்குவதற்குப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தநிலையில், குறித்த பரீட்சையின் விடைத்தாள் திருத்தும் பணிகள் எதிர்வரும் 8ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பகிரவும்...