Main Menu

அரசியல் கலாசாரத்தை தூய்மைப் படுத்தும் அரசாங்கத்தின் வேலைத் திட்டங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு – தயாசிறி ஜயசேகர

இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி தூய்மைப்படுத்துமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

ஆனால் 159 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட மமதையில் செயற்பட்டால் 5 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இவர்களையும் மக்கள் வீடுகளிலேயே அமர்த்துவதற்கு தயங்கப் போவதில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

குருணாகலில் ஞாயிற்றுக்கிழமை (22) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

ஊழல் மோசடிகள் ஒழிக்கப்பட்டு, குடும்ப அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பிலேயே 2015இலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினர்.

ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே ஜனாதிபதி, பிரதமருக்கிடையில் ஏற்பட்ட மோதலால் மக்களின் எதிர்பார்ப்புக்கள் கேள்விக்குறியாக்கப்பட்டன.

அதன் பின்னர் 2019இல் ஏற்படுத்திய மாற்றம் நாட்டை படு பாதாளத்துக்குள் தள்ளியது. தற்போது மீண்டுமொரு ஆட்சி மாற்றம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

2014ஆம் ஆண்டு ஏற்பட்ட அலையே தற்போது வேறுபட்ட திசைகளில் சென்று கொண்டிருக்கிறது. 2016ஆம் ஆண்டு மிகப் பிரம்மாண்டமாக தோற்றம் பெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது காணாமல் ஆக்கப்பட்டுள்ளது.

நாட்டின் அரசியல் போக்கினை மிக ஆழமாகவும் உன்னிப்பாகவும் அவதானிக்க வேண்டும். ஒருநாளும் கண்டிராத நூற்றுக்கும் மேற்பட்ட முகங்களை மக்கள் இம்முறை பாராளுமன்றத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

உலகில் இல்லாதவாறு வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியைப் போன்று, நாம் உலகில்இல்லாதவாறு படுதோல்வியை சந்தித்தோம்.

ஆனாலும் நாம் 25 – 30 இலட்சம் மக்களின் நிலைப்பாடுகளை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களாகவுள்ளோம். எனவே பாராளுமன்றத்தில் தேசிய மக்கள் சக்தியின் தனி நிலைப்பாட்டுக்கு மாத்திரம் இடமளிக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. எமது நிலைப்பாடுகளுக்கும் இடமளிக்கப்பட வேண்டும்.

இலங்கையிலுள்ள அரசியல் கலாசாரத்தை தேசிய மக்கள் சக்தி தூய்மைப்படுத்துமானால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்க நாம் தயாராகவுள்ளோம்.

159 ஆசனங்களைப் பெற்றுக் கொண்ட மமதையில் செயற்பட்டால் 5 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் இவர்களையும் மக்கள் வீடுகளிலேயே அமர்த்துவதற்கு தயங்கப் போவதில்லை என்றார்.

பகிரவும்...
0Shares