இந்திய நாடாளுமன்ற வளாகத்தில் கைகலப்பு – பாஜக எம்.பியை தாக்கினாரா ராகுல் காந்தி?
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடரின்போது கடந்த 17ஆம் திகதி மாநிலங்களவையில் பேசிய அமித்ஷா, ‘அம்பேத்கர்.. அம்பேத்கர்.. அம்பேத்கர்’ என முழக்கமிடுவது தற்போது ஃபேஷன் (Fashion) ஆகிவிட்டது எனவும், இதற்குப் பதிலாக கடவுளின் பெயரை உச்சரித்திருந்தால், சொர்க்கத்தில் அவர்களுக்கு இடம் கிடைத்திருக்கும் என்று பேசியிருந்தார்.
இந்த கருத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து நாடாளுமன்றத்திற்கு வெளியே அம்பேத்கரின் புகைப்படங்களை ஏந்தி அமித் ஷாவுக்கு எதிராகப் போராட்டம் நடத்தினர்.
அத்துடன், அம்பேத்கரை அவமதித்த அமித்ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் ஜெய் பீம் என்று தொடர்ந்து கோஷங்களை எழுப்பினர்.
இதனால் சபை நடவடிக்கைகள் நேற்றையதினம் (18) முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.
பின்னர் பாஜக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அமித் ஷா,
பாஜக ஒருபோதும் அம்பேத்கரை அவமதிக்காது.
அம்பேத்கரின் கொள்கைகளை பாஜக பின்பற்றி வருகிறது.
நாடாளுமன்றத்தில் காங்கிரஸினர் கருத்துக்களைத் திரித்துக் கூறிய விதம் மிகவும் கண்டிக்கத்தக்கது.
AI மூலம் எனது பேச்சைக் காங்கிரஸ் திரித்து வெளியிட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
எனினும், அமைச்சர் பதவியிலிருந்து அமித் ஷா விலக வேண்டும் என வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே அம்பேத்கரைக் காங்கிரஸ் கட்சி அவமதித்ததாக பாஜக எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் போராட்டம் நடத்தினர்.
நாடாளுமன்ற வளாகத்தில் பாஜக எம்.பி.க்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது.
இதில் பாஜக எம்.பி. பிரதாப் சந்திர சாரங்கி தாக்கப்பட்டுக் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தன்னை ராகுல் காந்தி தாக்கியதாகவும், அதனால் தான் கீழே விழுந்து மண்டையில் பலத்த அடி பட்டதாகவும் பிரதாப் சந்திர சாரங்கி குறிப்பிட்டுள்ளார்.
