2047-க்குள் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்ட தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும்: ஆளுநர் ஆர்.என்.ரவி

2047-ம் ஆண்டுக்குள் இந்தியா முழுமையான வளர்ச்சியை எட்ட வேண்டுமெனில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் `சாஸ்த்ரா விஷன்-2035′ திட்ட தொடக்க விழா,ரூ.60 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட ஆராய்ச்சி மற்றும் புத்தாக்க வசதிக்கான அனுசந்தன் கேந்த்ரா 3 மற்றும் 4-ம் வளாகத் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.
பல்கலை. துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்பிரமணியம் வரவேற்றார். வேந்தர் ஆர்.சேதுராமன் முன்னிலை வகித்தார். விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது: 2047-ம் ஆண்டுக்குள் முழுமையான வளர்ச்சியை எட்டுவதே நமது தேசத்தின் இலக்காகும். அதற்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேற வேண்டும். மேலும், உலகின் மிகப் பெரிய பொருளாதார நாடாக உருவாக வேண்டும்.
கரோனா காலத்தில் 150 நாடுகளுக்கு இந்தியா தடுப்பூசிகளை வழங்கியது. ஜி-20 மாநாட்டுக்கு தலைமை வகித்து, ஆப்பிரிக்காவை சேர்த்துக் கொண்டபோது, இந்தியாவின் கொள்கை வெளிப்பட்டது. அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவ உலகை நீடிக்கச் செய்ய வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம்.
உலக அளவில் போர்ச்சூழல் நிலவும் நிலையில், இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. நாடுகளுக்கிடையே மோதல்கள் நிலவும்போது, அதற்குத் தீர்வுகாண முயற்சிக்கும் இந்தியாவை உலகம் உற்று நோக்குகிறது. இந்தியாவால் உதவி செய்ய முடியும் என உலக நாடுகள் நம்புகின்றன.
ரஷ்யா – உக்ரைன் போரின்போது குடிமக்கள் வெளியேறும் வரை போரை நிறுத்துமாறு இந்தியா கேட்டுக் கொண்டபோது, இரு நாடுகளும் அதை ஏற்றுக் கொண்டன. இந்தியாவில் கடந்த காலத்தில் 20 மில்லியனாக இருந்தவரி செலுத்துவோரின் எண்ணிக்கை, தற்போது 100 மில்லியனாக உயர்ந்துள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடுகளில் பட்டியலில் 11-வது இடத்திலிருந்த இந்தியா, தற்போது 5-வதுஇடத்துக்கு முன்னேறியுள்ளது. வருங்காலத்தில் 3-வது இடத்துக்கு முன்னேறி, இந்தியா மிகப் பெரியபொருளாதார நாடாகும். நம் நாட்டில்வலுவான தலைமை இருப்பதால், அது சாத்தியமாகும். இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, சாஸ்த்ரா பல்கலைக்கழகமும், கெய்னஸ் டெக்னாலஜி நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டன. இதில், சாஸ்த்ரா பல்கலை.துணைவேந்தர் எஸ்.வைத்யசுப்பிரமணியமும், கெய்னஸ் டெக்னாலஜி நிறுவன முழு நேர இயக்குநர் ஜெயராம் சம்பத் கையெழுத்திட்டனர். விழாவில், பல்கலை. முதன்மையர் (திட்டம் மற்றும் மேம்பாடு) எஸ்.சுவாமிநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.