ரஷ்யாவிடமிருந்த போர்க் கைதிகள் 49 பேர் உக்ரேனுக்குத் திரும்பினர்

ரஷ்யாவிடமிருந்த போர்க்கைதிகள் 49 பேரை உக்ரேன் பத்திரமாகத் திரும்பப் பெற்றுள்ளது. 2022ஆம் ஆண்டு மரியுபோல் (Mariupol) நகரில் அஸோவ்ஸ்டால் (Azovstal) எஃகு ஆலையைத் தற்காத்த வீரர்களும் விடுவிக்கப்பட்டவர்களில் அடங்குவர் எனவும் பொதுமக்களும் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கைதிகள் பரிமாற்றத்துக்கு ஐக்கிய அரபுச் சிற்றரசுகள் சமரசம் பேசியுள்ளது. ரஷ்யர்கள் எத்தனை பேர் விடுவிக்கப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. போர்க்கைதிகளாக இருந்த ரஷ்யர்கள் சிலர் லாரிகளில் ஏற்றப்படுவதைக் கண்டதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 2022இல் உக்ரேன் மீது ரஷ்யா படையெடுத்த பிறகு அவ்வப்போது இருநாடுகளும் கைதிகளைப் பரிமாறிக்கொள்கின்றன. போர் தொடங்கியதிலிருந்து 56ஆவது முறை கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது. ரஷ்யாவிடமுள்ள ஒவ்வோர் உக்ரேனியரையும் பாதுகாப்பாய் அழைத்துவர அயராது பாடுபடுவதாக அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறினார்.
பகிரவும்...