நாட்டின் வறுமையை போக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அடித்தளம் இடும் -சஜித்

நாட்டின் வறுமையை போக்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அடித்தளம் இடும் என அதன் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற சமூர்த்தி உத்தியோகத்தர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஜனசவிய, அஸ்வெசும, கெமிதிரிய, சமூர்த்தி போன்ற வேலைத்திட்டங்களில் காணப்படுகின்ற சிறந்த விடயங்களை உள்ளடக்கி அவற்றிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து, வறுமையை 24 மாதங்களுக்குள் ஒழிப்பதற்காக மாதம் ஒன்றுக்கு தலா 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். ஐக்கிய மக்கள் சக்தியின் வறுமை ஒழிப்பு வேலைத்திட்டம் பணம் வழங்கும் வேலைத்திட்டம் அல்ல. அது வறியவர்களை வறுமையிலிருந்து மீட்கின்ற வேலைத்திட்டமாகும். அத்துடன் மூலதனங்களையும் வழங்கி வறுமையிலிருந்து மக்களை மீட்பதற்கான புதிய வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படும். இந்த சந்தர்ப்பத்தில் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வழங்குகின்ற சேவை கௌரவமாகக் கருதப்படும். சமூர்த்தி வேலைத்திட்டத்தினூடாக கொவிட் காலத்தில் அரசாங்கத்திற்குக் கடன் பெறவும் முடியுமாக இருந்தது. தற்போதைய அரசாங்கம் அந்த கடனைச் செலுத்தவும் இல்லை. கடனுக்கான வட்டியைச் செலுத்துவும் இல்லை. அரசாங்கம் 43 பில்லியன் ரூபாய் கடனை மீளச் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கின்றது. சமூர்த்தி வேலைத்திட்டத்தை எவரேனும் வீழ்த்துவதற்கு முயற்சி செய்தால் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்பட மாட்டாது. சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு குறைபாடுகள் காணப்படுகின்றன. பதவி உயர்வு குறைபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். சமூர்த்தி கொடுப்பனவுகள் இடைநிறுத்தப்பட்டவர்களுக்கும் நியாயத்தைப் பெற்றுக் கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பகிரவும்...