Main Menu

தலைவர் பதவி ராஜினாமா: ராகுலுக்கு தி.மு.க. பாராட்டு

காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த ராகுல் காந்திக்கு தி.மு.க. பாராட்டு தெரிவித்துள்ளது.

தி.மு.க. நாளிதழில் வெளியான செய்தியில் கூறி இருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, அதனை ஒட்டி எழுதியுள்ள திறந்த கடிதம் அவரது உள்ள உணர்வுகளின் வெளிப்பாடாக மட்டுமின்றி, அவர் ஒரு கட்சியின் தலைவர் பதவியைத் துறந்து விட்ட நிலையில், தேசியத் தலைவர் அளவு உயர்ந்து விட்டார் என்பதை வெளிக்காட்டுவதாக அமைந்து விட்டது.

காங்கிரஸ் கட்சியினர், அவரது தலைமையை இழந்ததற்கு வருந்தலாம், அதே நேரம் அவரது திறந்த கடிதம் கண்டு பெருமிதம் கொள்ளலாம்.

ராகுலின் பாட்டி இந்திரா அம்மையாரின் அப்பா ஜவகர்லால் நேரு, சிறையில் இருந்த போது தனது மகள் இந்திராவுக்கு எழுதிய கடிதங்கள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.

அத்தகைய பண்டித நேருவின் பாரம்பரியத்தில் வந்துள்ள ராகுல் எழுதிய திறந்த மடலும், பலரைக் கவர மட்டுமல்ல, அவர்களது சிந்தனையையும் கிளறி விட்டுள்ளது.

‘எனது போராட்டம் அரசியல் அதிகாரித்துக்கான சாதாரண போராட்டமல்ல. பாரதீய ஜனதா கட்சி மீது வெறுப்போ, கோபமோ கிடையாது. இந்தியா குறித்து அவர்களது (பி.ஜே.பி.) கொள்கைகளை என் உடலின் ஒவ்வொரு அணுவும் முழுமையாக எதிர்க்கிறது.

எனது ஒவ்வொரு அங்கத்திலும் ஊடுருவியுள்ள இந்தியா குறித்த குறிக் கோள்கள் எப்போதும் நேரடியாக அவர்களுடன் மோத வைக்கிறது.

இது புதிய போராட்டம் அல்ல, ஆயிரம் ஆண்டு காலமாக இந்த மண்ணின் மீது தொடுக்கப்பட்ட போராகும்.

ராகுல் காந்தி தனது திறந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள இந்த வாசகங்கள், இந்தியாவை அவர் எவ்வளவு நேசிக்கிறார், இந்தியாவின் இறையாண்மைக்கு ஆபத்து வந்து, அது எதிர் காலத்தில் துண்டு துண்டாக உடைந்து விடக்கூடாது என்பதில் எத்தனை எச்சரிக்கையுடன் இருக்கிறார் என்பதை எடுத்துக் காட்டுவதாக உள்ளன. திராவிட இயக்கத்தின் கருத்தும் அதுதான்.

‘இந்தியாவில் எப்போதும், ஒரு காலத்திலும் ஒரே குரல் ஒலிக்க முடியாது’ – இது இன்று ராகுல் காந்தி தெரிவித்துள்ள கருத்து. அன்று தொட்டு இன்று வரை திராவிட இயக்கம் கூறும் கருத்தும் இதுதான்.

காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து விலகி விட்ட நிலையில், அக்கட்சியின் தொண்டனாக இருந்து இந்தக் கருத்தை எடுத்துச் செல்வேன் என ‘சபதம்’ செய்துள்ளார் ராகுல். ராகுலின் இந்த முயற்சிக்கு திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவுக் கரத்தை என்றும் நீட்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பகிரவும்...