Main Menu

2026க்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பெப்ரவரி ஆரம்பமாகும் ; பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

2026ஆம் ஆண்டுக்கான வாக்காளர் கணக்கெடுப்பு நடவடிக்கைகள் 2026 பெப்ரவரி 1ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.  கடந்த ஆண்டுகளைப் போலவே, கணக்கெடுப்பு அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிற்கும் செல்ல மாட்டார்கள். புதிதாக சேர்க்கப்பட்ட மற்றும் நீக்கப்பட்ட பெயர்களை உள்ளடக்கிய ‘ A ‘ மற்றும் ‘Aa’ பட்டியல்களைப் புதுப்பிப்பதற்குத் தேவையான வீடுகளுக்கு மட்டுமே அவர்கள் விஜயம் செய்வார்கள். வாக்காளர் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டிய வீடுகளுக்கு மட்டுமே அதிகாரிகள் செல்வார்கள் என பெப்ரல் அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

அவ்வமைப்பு இது தொடர்பில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :

கணக்கெடுப்பு நடத்தப்படும் முறைமையை அவதானிக்க அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படும். அதிகாரிகள் தகவல்களைச் சேகரித்த பிறகு, ஒரு நபர் வாக்காளராகப் பதிவு செய்யப்படுவதற்குத் தகுதியானவரா இல்லையா என்பது குறித்த அதிகாரிகளின் பரிந்துரைகளையும் அவர்கள் அவதானிக்க முடியும்.

ஏதேனும் முறைகேடுகள் அவதானிக்கப்பட்டால், அது குறித்து கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் பிரதிநிதிகள் அறிவிக்கலாம். அத்தகைய அறிவிப்பின் பிரதி ஒன்று அந்தந்த மாவட்ட பிரதி அல்லது உதவி ஆணையாளருக்கு உடனடியாக அனுப்பப்பட வேண்டும்.

சாதாரண வசிப்பிடத்தைக் கொண்ட மக்களின் பெயர்கள் வாக்காளர்களாகச் சேர்க்கப்படாமை, தகுதியுள்ள நபர்கள் சேர்க்கப்படாமை அல்லது தகுதியானவர்களாகப் பரிந்துரைக்கப்படாமை, 18 வயதுக்குட்பட்டவர்கள் ஏற்கனவே பதிவு செய்யப்பட்டிருத்தல் அல்லது 2026 ஆம் ஆண்டிற்காகப் பரிந்துரைக்கப்பட்டிருத்தல் (துணைப் பட்டியல்களுக்கு இது பொருந்தாது), சாதாரண வசிப்பிடம் இல்லாத நபர்கள் குறிப்பிட்ட முகவரிகளின் கீழ் விண்ணப்பிப்பதோடு, அவர்கள் தகுதியானவர்களாகப் பரிந்துரைக்கப்படுதல் என்பன சாத்தியமான முறைகேடுகளாகக் கருதப்படுகின்றன.

அதேபோன்று ஒன்றுக்கும் மேற்பட்ட முகவரிகளின் கீழ் பதிவு செய்ய தனிநபர்கள் விண்ணப்பித்தல், வாக்காளர் பதிவிற்காகப் பொய்யான தகவல்களைச் சமர்ப்பித்தல் அல்லது தகுதியற்ற நபர்களை முன்மொழிதல் என்பனவும் முறைகேடுகளாகக் கருதப்படுகின்றன.

கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கணக்கெடுப்பு செயல்முறையை அவதானிக்க பிரதிநிதிகளை நியமிக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள போதிலும், ஒரு சில கட்சிகளே அவ்வாறு செய்கின்றன.  பெரும்பாலான கட்சிகள் பிரதிநிதிகளை நியமிப்பதில் தவறிவிடுகின்றன.

தேர்தல் நெருங்கும் வேளையில் தமது ஆதரவாளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படவில்லை எனப் புகார் அளிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்பதை வலியுறுத்துகிறோம். அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் இச்செயல்முறையில் தீவிரமாகப் பங்கெடுத்தால், தகுதியுள்ள அனைத்து நபர்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதையும், தகுதியற்றவர்கள் நீக்கப்படுவதையும் உறுதி செய்ய முடியும்.

பகிரவும்...