13ஆவது திருத்தச்சட்டத்தில் கை வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை – இராமலிங்கம் சந்திரசேகர்

13ஆவது திருத்தச்சட்டத்தினை தமிழ் மக்கள் தங்களுக்குக் கிடைத்த ஒரு உரிமையாகக் கருதுகின்ற நிலையில் அதில் கை வைப்பதற்கு அரசாங்கம் முயற்சிக்கவில்லை எனக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற அயலகத் தமிழர் மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் அங்கு இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
13ஆவது திருத்தச்சட்டம் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை விடவும் தமிழ் மக்களின் நிலைப்பாடே முக்கியமாகப் பார்க்கப்படுகிறது.
13ஆவது திருத்தச்சட்டம் நாட்டின் அடிப்படைச் சட்டமான அரசியலமைப்பிலும் காணப்படுகின்றது.
அந்த வகையில் எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை நடத்தவுள்ளதுடன் அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் இறுதியில் அல்லது அடுத்த ஆண்டின் முற்பகுதியில் மாகாண சபை தேர்தலையும் நடத்துவதற்கு அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகக் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.