Main Menu

ஹீத்ரோ விமான நிலையத்தில் பெப்பர் ஸ்பிரே தாக்குதல் – 21 பேர் பாதிப்பு, ஒருவர் கைது

லண்டனின் ஹீத்ரோ விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட பெப்பர் ஸ்பிரே தாக்குதல் (pepper spray attack ) சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலும் பல சந்தேக நபர்கள் தேடப்பட்டு வருகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை காலை 8.11 மணிக்கு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதல் குறித்த முறைப்பாடு கிடைக்கப்பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தால் பயண நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க இடையூறுகள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், இது ஒரு பயங்கரவாத சம்பவம் அல்ல என்றும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிராபத்து ஏற்படவில்லை என்றும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளர்.

ஒருவருக்கொருவர் தெரிந்த ஒரு குழுவினருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் விளைவே இந்த தாக்குதல் சம்பவம் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் 31 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தாக்குதல் சம்பவத்தை அடுத்து மூன்று வயது குழந்தை உட்பட மொத்தம் 21 பேருக்கு சம்பவ இடத்திலேயே சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த சம்பவத்தால் பயணிகள் விமான நிலையத்தை அணுகுவதில் தாமதங்கள் மற்றும் சிரமங்களை எதிர்கொண்டனர். எனினும், பெரும்பாலான இடையூறுகள் சரிசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் ஒருவரின் பயணப் பெட்டியை கொள்ளையிடும் நோக்கில் நான்கு பேர் கொண்ட குழுவினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

பகிரவும்...