“விருதுநகர் மாவட்டத்தில் விஜய பிரபாகரன் போட்டியிடுவார்” – பிரேமலதா தகவல்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜய பிரபாகரன் போட்டியிடுவார். தேர்தலுக்குப் பின்பு தேமுதிகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என சிவகாசியில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா பேசினார்.
சிவகாசியில் தேமுதிக சார்பில் ‘உள்ளம் தேடி, இல்லம் நாடி’ என்ற தலைப்பில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பிரச்சாரம் மேற் கொண்டார். இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரேமலதா பேசியதாவது: விருதுநகர் மாவட்டம் விஜயகாந்தின் கோட்டை. விருதுநகர் மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் தான் விஜயபிரபாகரன் போட்டியிடுவார்.
மக்களவைத் தேர்தலில் விஜயபிரபாகரன் பெற்ற வெற்றி பறிக்கப்பட்டது. இந்த முறை அவரது வெற்றி உறுதி செய்யப்படும். அவர் சிவகாசி தொகுதியில் போட்டி யிடுவது குறித்து பின்னர் முடிவு செய்வோம்.
சீனப் பட்டாசுகளை முற்றிலு மாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விஜயகாந்தின் தொண்டர்கள் இருக்கும் வரை தேமுதிகவை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது.
நீங்கள் விரும்பு பவர்களுடன் தான் கூட்டணி வைப்பேன். 2026 தேர்தலுக்குப் பிறகு தேமுதிகவின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். இவ்வாறு அவர் பேசினார்.
