Main Menu

விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்

பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, 87, பெங்களூரில் நேற்று(ஜூலை 14) காலமானார். அவரது உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஊர்வலமாக சொந்த ஊருக்கு எடுத்து செல்லப்பட்டு அங்கு துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் இன்று(ஜூலை 15) உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கர்நாடக மாநிலம் பெங்களூரில் பிறந்த சரோஜா தேவி 16 வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கினார். கன்னடத்தில் ஹொன்னப்ப பாகவதரின், மஹாகவி காளிதாஸ் என்ற படத்தில் அறிமுகமானார். அதன்பின் தமிழ் திரையுலகுக்கு வந்த இவர், எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ரவிச்சந்திரன் உட்பட பல நட்சத்திர நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தார். தெலுங்கு, ஹிந்தியிலும் நடித்துள்ள இவர் ஏறக்குறைய 200 படங்கள் நடித்துள்ளார்.

‘கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி’ என ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சரோஜா தேவி. பெங்களூரின் மல்லேஸ்வரத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், வயது முதிர்வு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று காலை 8:30 மணியளவில் காலமானார். அரசியல் தலைவர்கள், திரையுலக பிரமுகர்கள் என, பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கர்நாடகா முதல்வர் சித்தராமையா நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். இன்று காலை 11:30 மணி வரை, அவரது உடல் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

 பழம்பெரும் நடிகை சரோஜா தேவி காலமானார்

அரசு மரியாதை

பின்னர் சரோஜா தேவியின் சொந்த ஊரான ராம்நகர், சென்னப்பட்டணாவின், தஷாவரா கிராமத்திற்கு அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டது. வழிநெடுக ரசிகர்கள் பலர் அவருக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பின்னர் தஷாவரா கிராமத்தில் துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு சார்பில் மரியாதை செய்யப்பட்டது. பின்னர் ஒக்கலிகர் சம்பிரதாயப்படி சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பகிரவும்...