Main Menu

வரவு-செலவுத் திட்டங்களுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் ஆயிரக் கணக்கானோர் போராட்டம்

அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக பிரான்ஸ் முழுவதும் வியாழக்கிழமை (18) முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களில் இலட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனும் அவரது புதிய பிரதமர் செபாஸ்டியன் லெகோர்னுவும் சமர்ப்பிக்கப்படவுள்ள தங்களது வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை கைவிடுமறும் வலியுறுத்தினர்.

போராட்ட நாளின் ஒரு பகுதியாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களில் ஆசிரியர்கள், ரயில் சாரதிகள், மருந்தாளுநர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அடங்குவர்.

அதே நேரத்தில், பதின்ம வயதினர் உயர்நிலைப் பாசாலைகளை மணிக்கணக்கில் முற்றுகையிட்டனர்.

போராட்டக்காரர்களும் தொழிற்சங்கங்களும் முந்தைய அரசாங்கத்தின் நிதித் திட்டங்களைக் கைவிட வேண்டும், பொது சேவைகளுக்கு அதிக செலவு செய்ய வேண்டும், செல்வந்தர்கள் மீது அதிக வரிகள் விதிக்க வேண்டும், ஓய்வூதியம் பெற மக்கள் நீண்ட நேரம் வேலை செய்ய வைக்கும் ஒரு பிரபலமற்ற மாற்றத்தை மாற்றியமைக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தனர்.

வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்களில் 1 மில்லியன் மக்கள் பங்கேற்றதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

எனினும், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அந்த எண்ணிக்கையில் பாதியாக இருப்பதாக அதிகாரிகள் மதிப்பிட்டுள்ளனர்.

அதேநேரம், லியோன் மற்றும் நான்ந் நகரங்களில் மோதல்கள் நடந்ததாகவும், பாரிஸில் பொலிசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே சிறிய அளவிலான மோதல்கள் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சில போராட்டக்காரர்கள் வணிகங்கள் மற்றும் கட்டிடங்களை சேதப்படுத்தியதை அடுத்து, கலவரத் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தலைநகரின் மையத்தில் கூட்டத்தைக் கலைக்க கண்ணீர் புகை குண்டுகள் மற்றும் கேடயங்களைப் பயன்படுத்தினர்.

முன்னாள் பிரதமர் பிரான்சுவா பேரூவின் அரசாங்கம் கவிழ்க்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் நெருங்கிய நண்பரான செபாஸ்டியன் லெகோர்னு பிரதமராக நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் இந்தப் போராட்டங்கள் வெடித்துள்ளன.

போராட்டங்களால் வியாழக்கிழமை பொதுப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

பாரிஸில் பல மெட்ரோ பாதைகள் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அதே நேரத்தில் பிரான்ஸ் முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில் போராட்டக்காரர்கள் வீதிகளை மறித்தனர்.

தலைநகர் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு முன்னால் மாணவர்கள் கூடி, நுழைவாயில்களைத் தடுத்து, கோஷங்களை எழுப்பினர்.

ஆசிரியர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் வெளிநடப்பு செய்தனர்.

மருந்தாளுநர்களும் கூட்டமாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

98% மருந்தகங்கள் மூடப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரான்ஸ் முழுவதும் 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது சேவைகளுக்கான செலவுகளை அதிகரிக்கவும், செல்வந்தர்கள் மீதான வரிகளை அதிகரிக்கவும், குறுகிய கால பேய்ரூ அரசாங்கத்தால் கோடிட்டுக் காட்டப்பட்ட வரவுசெலவுத் திட்ட வெட்டுக்களை குறைக்கவும் தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன.

பகிரவும்...
0Shares