வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை – ஆளுநர் நா.வேதநாயகன்
வடக்கு மாகாணத்தைப் போன்று வளமானதொரு மாகாணம் இலங்கையில் வேறில்லை. ஆனால், வறுமையில் முன்னிலையிலிருப்பது எமது மாகாணத்தின் இரண்டு மாவட்டங்களே. இந்த முரண்நிலையை மாற்றியமைக்க வேண்டும் என்பதுதான் எனது கனவு. 1970களில் மூடிய பொருளாதாரக் கொள்கை இருந்தபோது, வடக்கு மாகாணம் பொருளாதாரத்தில் உச்ச நிலையில் இருந்தது. தற்போதைய திறந்த பொருளாதாரச் சூழலில், நாம் மீண்டும் அந்த உன்னத நிலையை அடைய வேண்டுமானால், நேரடி ஏற்றுமதிப் பொருளாதாரமே நமக்கான ஒரே வழியாகும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.
கிறிஸ்ரலைஸ் (Chrysalis) நிறுவனத்தின் ஏற்பாட்டில், பெண்கள் தலைமையிலான கொல்லைப்புறக் கோழி வளர்ப்பு ஊடான நிலைபேறான தன்மை மற்றும் மீளெழுச்சி தொடர்பான ‘வாய்ப்புகளை உருவாக்குதல்: கற்றலிலிருந்து வருமானம் வரை’ எனும் ஆய்வரங்கு மற்றும் விவசாய கள வணிகப் பாடசாலைத் திட்டத்தின் சாதனைகளைக் கொண்டாடும் நிகழ்வு கிளிநொச்சியில் நடைபெற்றது.
இன்று புதன்கிழமை காலை கிளிநொச்சி அறிவியல் நகரிலுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்:
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், எமது உற்பத்திப் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்குச் சாதகமான சூழல் உருவாகியுள்ளது. எமது சிறு கைத்தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்கள் தமது உற்பத்திகளைத் தரகர்களின்றி நேரடியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்புகளை நாம் உருவாக்கி வருகின்றோம். யாழ்ப்பாணத்திலிருந்து இதனை வெகுவிரைவில் செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்.
வடக்கில் விவசாய மற்றும் கடல்சார் உற்பத்திப் பொருட்கள் மூலப்பொருட்களாகவே வெளியேறுகின்றன. அவற்றை இங்கேயே பெறுமதிசேர் உற்பத்திப் பொருட்களாக மாற்றி ஏற்றுமதி செய்வதற்கான தொழிற்சாலைகள் எம்மிடம் இல்லை. இக்குறைபாட்டை நிவர்த்தி செய்யவே, அரசாங்கம் வடக்கில் மூன்று முதலீட்டு வலயங்களை அறிவித்துள்ளது.
கிறிஸ்ரலைஸ் நிறுவனம் ஊடாக உழுந்து, நிலக்கடலை மற்றும் கோழி வளர்ப்பு ஆகிய துறைகள் ஊக்குவிக்கப்படுவது பாராட்டத்தக்கது. இன்று சந்தையில் ‘பார்ம்’ முட்டைகளை விட, எமது ‘ஊர் முட்டைகளுக்கு’ அதிக கேள்வி உள்ளது. எனவே, இத்தகைய சுயதொழில் முயற்சிகள் எமது பொருளாதாரத்தைப் பலப்படுத்தும்.
முன்னைய காலங்களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் வேறு, சமூகம் வேறு என்ற நிலை இருந்தது. ஆனால், கிளிநொச்சியில் அமைந்த விவசாய பீடமும், பொறியியல் பீடமும்தான் அந்த இடைவெளியைக் குறைத்து, சமூகத்தோடு ஒன்றிணைந்த உணர்வை ஏற்படுத்தின. எதிர்காலத்தில் விவசாய பீடம், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை இணைத்துத் திட்டங்களை முன்னெடுப்போம்.
எமக்கு இப்போது காலநிலை பெரும் சவாலாக மாறியுள்ளது. இரணைமடுக் குளத்தின் கொள்ளளவை விட இரண்டு மடங்கு நீர் கடலுக்குச் செல்கிறது. இந்த மாற்றத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் இத்தகைய கணிக்க முடியாத காலநிலையே தொடரும் என்பதால், அதற்கு ஏற்றவாறு எமது விவசாய முறைகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும், என்றார்.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவசாய பீடத்தினர், கிறிஸ்ரலைஸ் நிறுவன அதிகாரிகள், அரச அதிகாரிகள் மற்றும் பயனாளிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
