Main Menu

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட இடங்களில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட சட்டத்தரணிகள்

வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று(07) ஒருநாள் அடையாள பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்த நிலையில் கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் அதற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

யாழ் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் நேற்று கைது செய்யப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் சட்டத்தரணியின் கைது நடவடிக்கையானது சட்டத்திற்கு முரனான வகையில் இடம்பெற்றுள்ளதாக குற்றச்சாட்டினை முன்வைத்து வடக்கு மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று (07) பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடமையாற்றும் பெண் சட்டத்தரணி ஒருவர் போலி ஆவணம் தயாரித்த குற்றச்சாட்டில் யாழ்.மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் கடந்த நேற்று (06) கைது செய்யப்பட்டார்.

அதனையடுத்து அவர் மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில், சட்டத்தரணியின் கைது நடவடிக்கையானது சட்டத்திற்கு முரனான வகையில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் அவரை அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டதாகவும் தெரிவித்து வட மகாணத்தில் சட்டத்தரணிகள் இன்று போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.

யாழ் மாவட்டத்தின் அனைத்து நீதிமன்றங்கள் மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா உள்ளிட்ட மாவட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் பங்கேற்புடன் போரட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பணம் நீதிமன்ற வளாகம் முன்னிலையில் இன்று முற்பகல் இந்த போராட்டம் இடம்பெற்றது.

இதேவேளை பணிபகிஷ்கரிப்பு காரணமாக யாழ்.சாவகச்சேரி நீதிமன்றத்திற்கு சட்டத்தரணிகள் இன்று ஆஜராகாத நிலையிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.

அத்துடன் வடமாகணத்தில் சட்டத்தரணிகளின் பகிஷ்கரிப்பு நடவடிக்கைக்கு வலு சேர்க்கும் வகையில் மன்னார் மாவட்டத்திலும் சட்டத்தரணிகள் இன்று பணிபகிஸ்கரிப்பை மேற்கொண்டனர்.

மாவட்ட நீதிமன்றம் மற்றும் மன்னார் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்காது சட்டத்தரணிகள் பணிபகிஷ்கரிப்பினை முன்னெடுத்திருந்தனர்.

இதன்காரணமாக மன்னாரில் இன்று நீதிமன்ற செயல்பாடுகள் ஸ்தம்பிதமடைந்த நிலையில் வழக்கு விசாரணைகள் பிரிதொரு தினத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த போராட்டத்துக்கு கிழக்கு மாகாண சட்டத்தரணிகளும் ஆதரவு வழங்கியிருந்ததுடன்
ஒருசில மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பை முன்னெடுத்திருந்தனர்.

பகிரவும்...
0Shares