Main Menu

ராஜபக்ஷக்களின் இரகசியங்கள் வெளியாகும் அச்சத்திலா “கஜ்ஜா” படுகொலை செய்யப்பட்டார் – திலீப் வெதஆராச்சி கேள்வி

ராஜபக்ஷக்களின் இரகசியங்கள் வெளியாகும் என்ற அச்சத்தில் மித்தெனிய கஜ்ஜா படுகொலை செய்யப்பட்டார் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. இந்த நபர் ராஜபக்ஷர்களுக்காகவே அரசியல் செய்தார்.ஜனாதிபதித் தேர்தலுக்கு பின்னர் ராஜபக்ஷக்ளுக்கு எதிராக செயற்பட்டார்.

ஆகவே அக்கொலை குறித்து முறையாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திலீப் வெதஆராச்சி தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (22) நடைபெற்ற 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மீதான 5 ஆம் நாள் விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

நாட்டின் தேசிய பாதுகாப்பு குறித்து விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஒரு வாரத்துக்குள் பல இடங்களில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. கொழும்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் சந்தேக நபர் படுகொலை செய்யப்பட்டார். மித்தெனிய பகுதியில் தந்தை உட்பட இரண்டு சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டனர். நேற்று (நேற்று முன்தினம்) இரவு கொட்டாஞ்சேனை பகுதியில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இவை தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாதா என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த செவ்வாய்க்கிழமை (20) இரவு மித்தெனிய பகுதியில் ‘கஜ்ஜா’ என்றழைக்கப்படும் அருண விதானகே மீதும் அவரது இரண்டு பிள்ளைகள் மீதும் துப்பாக்கிச்சூட்டு பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் மூவரும் உயிரிழந்துள்ளனர். இரண்டு சிறுபிள்ளைகளின் இறப்புக்கு வருத்தமடைகிறேன். தந்தையின் தவறினால் பிள்ளைகள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அருண விதான என்பவர் 2022 காலப்பகுதியில் போராட்டத்தின் போது போராட்டகாரர்களுக்கு எதிராக செயற்பட்டார். மெதமுல்ல பகுதியில் டி.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலையை உடைத்து போராட்டகாரர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது இவர் ரி-57 ரக துப்பாக்கியுடன் அப்பகுதிக்கு வந்து துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டார்.

இதனால் இருவர் பலியானதுடன், இருவர் காயமடைந்தனர்.இருப்பினும் அவருக்கு எதிராக முறையான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. இந்த நபர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும், ராஜபக்ஷ குடும்பத்துக்கும் சார்பாகவே செயற்பட்டார். அவர்களுக்காகவே அரசியல் செய்தார். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது ராஜபக்ஷக்களிடம் இருந்து விலகி பிறிதொரு அரசியல் கட்சிக்கு சென்றார். பின்னர் ராஜபக்ஷக்களுக்கு எதிராக செயற்பட்டார்.

ராஜபக்ஷக்nகள் தொடர்பான இரகசியங்கள் வெளிவரும் என்ற அச்சத்தில் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே கஜ்ஜாவின் கொலையில் மர்மம் உள்ளது. இந்த விவகாரத்தை அரசாங்கம் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என்றார்.

பகிரவும்...
0Shares