முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது தொடர்பில் எதிர்கட்சியினரின் ஊடக சந்திப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் அனைவரும் இணைந்து இன்று கொழும்பில் ஊடக சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்திருந்தனர்.
குறித்த ஊடக சந்திப்பில் பலரும் கருத்துக்களை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இவ்வாறு கருத்து தெரிவித்தார்,
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும் .
நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையிலேயே தற்போது அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றுக் கூடியுள்ளோம்.
எமது அரசியல் கொள்கையில் நாம் கவலையடைந்திருக்கிறோம், சிறைவாசம் அனுபவித்திருக்கிறோம்.
பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்தும் வருகின்றோம்.
அரசியல்வாதிகள் சிறைவாசம் அனுபவிக்கவில்லையாயின் அவர்களின் அரசியல் வாழ்க்கை பூரணமடையாது.
எவ்வாறாயினும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கைதானது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.
எனவே அவரை விடுப்பதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும், சட்டத்தரணிகளும் ஒன்றிணைந்து ஜனநாயக ரீதியிலான நடவடிக்கைகளை முனைப்புடன் முன்னெடுக்கவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டமை தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
அரசியல் பழிவாங்கல் செயற்பாட்டை கூட்டு எதிர்க்கட்சியாக வன்மையாக கண்டிகின்றோம்.
பட்டலந்த வதை முகாம், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி மோசடி என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தே, அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைத்தது.
எனவே அவ்வாறான குற்றச்சாட்டுக்களில் ரணில் விக்ரமசிங்கவை கைது செய்திருந்தால் எதிர்க்கட்சிகள் இவ்வாறு ஒன்றிணைந்து இந்த ஊடக சந்திப்பை நடத்தியிருக்க தேவையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பகிரவும்...