மீனவர் பிரச்சினை தொடர்பான இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் – அண்ணாமலை

மீனவர் பிரச்சினை தொடர்பாக இந்தியா – இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் என பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினையை சட்டம் ஒழுங்காகவோ, எல்லை பிரச்சினையாகவோ அணுகாமல் மனிதாபிமான பிரச்சினையாக அணுக வேண்டும் என்றே இந்திய அரசு, இலங்கை அரசிடம் வலியுறுத்தி வருகிறது.
இந்த நிலையில், மீனவ பிரச்சினை தொடர்பாக தாம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதமொன்றை எழுதியதாகவும், குறித்த கடிதத்திற்குப் பதிலளித்த அவர் இந்தியா-இலங்கை கூட்டுப் பணிக்குழு கூட்டம் விரைவில் நடைபெறும் எனக் குறிப்பிட்டதாகவும் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மீனவர் பிரச்சினைக்கு மத்திய, மாநில அரசுகள் இணைந்து நிரந்தர தீர்வு காண வேண்டும் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.
மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்ற மீனவர்களின் காத்திருப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட படகுகளையும், கைது செய்யப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் மீனவர்களையும் நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் இதன்போது கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனிடையே, 1974 ஆம் ஆண்டு மத்தியிலும், மாநிலத்திலும் இருந்த அரசுகள், கச்சத்தீவு சுற்றுவட்ட கடல் பகுதியை அநியாய ஒப்பந்தம் மூலம் இலங்கைக்கு வழங்கி மீனவர்களுக்கு அநீதி இழைத்துள்ளதாகத் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, தமது எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.