மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள யாழ். கலாசார மண்டபம்

பல்வேறு எதிர்ப்புகளை அடுத்து யாழ்ப்பாணம் கலாசார மண்டபம் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய நிதியுதவியின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கட்டடம் 2023ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது.
இந்தநிலையில் கடந்த 18ஆம் திகதி புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்டோர் பங்கேற்ற நிகழ்வொன்றின் போது குறித்த கட்டடத்தின் பெயர் திருவள்ளுவர் கலாசார மையம் என பெயர் சூட்டப்பட்டு அதற்கான பெயர் பலகையும் திறந்து வைக்கப்பட்டது.
எனினும் அதில் யாழ்ப்பாணம் என்ற பெயர் நீக்கப்பட்டமைக்கு அரசியல் தரப்பினர், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொது மக்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தனர்.
அதேநேரம் இந்த விடயம் முக்கிய பேசுபொருளாகவும் மாறியிருந்தது.
இந்தநிலையில் குறித்த கட்டடம் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையம் என தற்போது பெயர் மாற்றப்பட்டு அதற்கான பெயர் பலகையும் பொருத்தப்பட்டுள்ளது.